சொகுசு வாகனத்தை விலைக்கு வாங்குவது போல் நடித்து, சோதனை ஓட்டத்தின் போது RM1 லட்சம் ‘ஃபோர்டு ரேஞ்சர்’ வாகனத்தை கடத்திய ஆசாமிகள்!

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான், தம்பின் (Tampin) மாவட்டத்திற்கு உட்பட்ட கெமெஞ்சே பகுதியில், முகநூல் விளம்பரத்தைப் பார்த்து சொகுசு வாகனத்தை விலைக்கு வாங்குவது போல் நடித்து, சோதனை ஓட்டத்தின் (Test Drive) போது ‘ஃபோர்டு ரேஞ்சர் ரேப்டர்’ (Ford Ranger Raptor) ரக வாகனத்தைக் கடத்திச் சென்ற இருவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கடந்த வியாழக்கிழமை அரங்கேறிய இத்துணிகரச் சம்பவம் குறித்து தம்பின் மாவட்டக் காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டெண்ட் அமிருடின் சாரிமான் இன்று செய்தியாளர்களிடம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.

பாதிக்கப்பட்ட 42 வயதுடைய வாகன உரிமையாளர், தனது கருப்பு நிற ‘ஃபோர்டு ரேஞ்சர்’ வாகனத்தை விற்பனை செய்வதற்காக ஃபேஸ்புக் தளத்தில் விளம்பரம் செய்திருந்தார். அதனைப் பார்த்த சந்தேக நபர்களான இருவர், சொகுசு காரான ‘மினி கூப்பர்’ (Mini Cooper) காரில் மிக ஆடம்பரமாக உரிமையாளரைச் சந்திக்க வந்துள்ளனர்.

வாகனத்தை ஓட்டிப் பார்த்துவிட்டு வாங்குவதாகக் கூறி, சோதனை ஓட்டத்தின் போது உரிமையாளரின் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த வாகனத்தை அதிரடியாகக் கடத்திக் கொண்டு தப்பியோடியுள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய கடத்தல்காரர்கள்: வாகனத்தைக் கடத்திக் கொண்டு அதிவேகமாகத் தப்பிச் செல்லும் வழியில், கொள்ளையர்கள் பொதுச் சாலையில் சென்றுகொண்டிருந்த மற்றொரு வாகனத்தின் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

கொள்ளையர்கள் வந்த மினி கூப்பர் காரின் பதிவு எண்களைப் போலீசார் சோதித்த போது, அது அதிகாரிகளைத் திசைதிருப்புவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ‘போலி பதிவு எண்’ (Fake Registration Number) என்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடத்தப்பட்ட இந்த ஃபோர்டு ரேஞ்சர் வாகனத்தின் மதிப்பு சுமார் 100,000 ரிங்கிட் (1 லட்சம் ரிங்கிட்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட உரிமையாளரால் நேற்று இரவு தம்பின் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ள இக்குற்றவாளிகளைக் கண்டறியப் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த தகவல்களை அல்லது கடத்தப்பட்ட கருப்பு நிற ஃபோர்டு ரேஞ்சர் வாகனம் குறித்த விவரங்களைத் தம்பின் மாவட்டக் காவல்துறைத் தலைமையகத்தின் அவசர ஹாட்லைன் எண்ணான 06-4431999 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொண்டு உடனே வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

தகவல் தருபவர்களின் விவரங்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்றும், சமூக ஊடகங்கள் வழியாக வாகனங்களை விற்கும் பொதுமக்களுக்கு இச்சம்பவம் ஒரு பெரிய எச்சரிக்கை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here