நாட்டில் ஏப்ரல் மாதத்தில் 7,057 பேர் வேலையிழப்பு: மார்ச் மாதத்தை விட 21% உயர்வு!

கோலாலம்பூர்:

மலேசியாவில் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஏப்ரல் மாதத்தில் ஊழியர்களின் வேலையிழப்பு விகிதம் 21 விழுக்காடு அதிரடியாக அதிகரித்துள்ளதாக பொருளாதார அமைச்சர் அக்மல் நஸ்ருல்லா முகம்மது நசீர் தெரிவித்துள்ளார்.

அவரது அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 7,057 ஊழியர்கள் தங்களது வேலைகளை இழந்துள்ளனர். இது மார்ச் மாதத்தில் பதிவான 5,855 வேலையிழப்புகளுடன் ஒப்பிடுகையில் 21% அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுடன் ஒப்பிடுகையில் தற்போது வேலையிழப்பு எண்ணிக்கை சற்று குறைவாக இருந்தாலும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று அமைச்சர் வலியுறுத்தினார்.

“ஒவ்வொரு வேலையிழப்பும் ஒரு தனிநபரின் பாதிப்பு மட்டுமல்ல; அது ஒரு குடும்பம் தனது ஒட்டுமொத்த வருமான ஆதாரத்தை இழந்து தவிப்பதைக் காட்டுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (PERKESO/SOCSO) கீழ் உள்ள ‘வேலைவாய்ப்புக் காப்புறுதித் திட்டத்தின்’ (Employment Insurance System – EIS) மூலம் உரிய சமூகப் பாதுகாப்பு மற்றும் உதவிகள் கிடைப்பதை அரசாங்கம் முழுமையாக உறுதி செய்யும்.”

இந்தத் திட்டத்தின் கீழ், திடீரென வேலைகளை இழந்த ஊழியர்களுக்குப் பின்வரும் இரு முக்கிய உதவிகள் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது: முதலாவதாக அவர்கள் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்படாமல் இருக்க, புதிய வேலை கிடைக்கும் வரை தற்காலிக நிதியுதவி வழங்கப்படும். மற்றையது அவர்கள் தங்களின் தகுதிக்கேற்ப புதிய வேலைகளை விரைவாகத் தேடிக் கண்டறியத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும், ஆலோசனைகளும் வழங்கப்படும்.

இதற்கிடையில், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரச் சூழல் குறித்து மலேசியப் புள்ளிவிவரத்துறை (DOSM) கடந்த வெள்ளிக்கிழமை (மே 22) வெளியிட்ட அறிக்கையில், மலேசியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் (Unemployment Rate) 2.9 விழுக்காடாகக் குறைந்துள்ளது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here