கோலாலம்பூர்:
கடந்த 2021-ஆம் ஆண்டு, ஆன்லைன் மூலம் பழகிய ஒரு தனித்து வாழும் தாயின் 3 வயது பச்சிளம் மகனை, இரக்கமே இன்றி மிகக் கொடூரமாகச் சித்திரவதை செய்து படுகொலை செய்த லோரி ஓட்டுநரான எஸ். தேவந்தகுமார் (S. Davandakumar) என்பவருக்குக் கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று ‘தூக்குத் தண்டனை’ விதித்து அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.
இந்தக் கொடூரக் கொலை வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி நோர்லிஸா ஒத்மான், குற்றவாளியின் மனிதாபிமானமற்ற செயலுக்குத் தூக்குக் கயிறு மட்டுமே சரியான மற்றும் தகுந்த தண்டனை என்று தனது 32 பக்க எழுத்துப்பூர்வ தீர்ப்பில் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற விசாரணையின்படி, நெகிரி செம்பிலான், சிரம்பானைச் சேர்ந்த எம். சுதா (M. Sutha) என்ற பெண்ணுடன் முகநூல் அல்லது ஆன்லைன் தளம் வழியாக லோரி ஓட்டுநரான தேவந்தகுமாருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் சுதா, தனது 3 வயது மகன் கே. நிதிஷுடன் (K. Nithish) கிள்ளான், தாமான் செந்தோசாவில் உள்ள ஒரு வீட்டில் தேவந்தகுமாருடன் இணைந்து வாழத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் இருவரையும் நன்றாகக் கவனித்துக் கொண்ட தேவந்தகுமார், ஒன்றாக வாழத் தொடங்கிய மூன்றாவது வாரத்திலேயே தனது உண்மையான நச்சு முகத்தைக் காட்டியுள்ளார். கடந்த டிசம்பர் 22-ஆம் தேதி, உடைந்த நாற்காலியின் கட்டை மற்றும் இடுப்புப் பெல்டால் குழந்தையை அவர் கொடூரமாகத் தாக்கியுள்ளார். தடுக்க வந்த தாயையும் அடித்து உதைத்துள்ளார்.
அடுத்த நாள், தாய் குழந்தையைக் குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது, “3 வயது குழந்தைக்குத் தானாகக் குளிக்கத் தெரியாதா?” எனக் கேட்டு, ரப்பர் குழாயால் அடித்து, குழந்தையின் கழுத்தைக் கடித்துக் குதறியுள்ளார். பின்னர், குழந்தையைத் தலைகீழாகப் பிடித்து, தண்ணீர்க் குவளைக்குள் (Pail of Water) சுமார் 5 நிமிடங்கள் மூழ்கடித்துச் சித்திரவதை செய்துள்ளார்.
அதன் பின்னர் குழந்தையைக் கட்டிலில் தூக்கி வீசி, அறையைப் பூட்டிக் கொண்டு உள்ளே கொடூரமாகத் தாக்கியுள்ளார். தாய் வெளியில் இருந்து கதவைத் தட்டி அழுதபோதும், உள்ளே குழந்தையின் மரண ஓலம் மட்டுமே கேட்டுள்ளது.
சிறிது நேரம் கழித்துத் தேவந்தகுமார் கதவைத் திறந்தபோது, குழந்தை அசைவற்று மூச்சுத் திணறிக்கொண்டிருந்தது. உடனடியாகக் கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்குக் (HTAR) கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே அந்தப் பச்சிளம் உயிர் பிரிந்தது.
பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவ நிபுணர் (Pathologist) நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கையில், அந்தக் குழந்தையின் மென்மையான உடல் தசைகள் அனைத்தும் மிகக் கொடூரமான ஆயுதங்களால் தாக்கப்பட்டுச் சிதைந்து போயிருந்ததாகவும், ஒரு 3 வயது குழந்தையினால் தாங்க முடியாத அளவிற்கு மிக விபரீதமான வன்முறை நடந்ததே மரணத்திற்குக் காரணம் என்றும் உறுதிப்படுத்தினார்.
தீர்ப்பை வாசித்த நீதிபதி நோர்லிஸா ஒத்மான் மிக உருக்கமாக “தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தெரியாத, வலிக்கிறது என்று அழ மட்டுமே தெரிந்த ஒரு பச்சிளம் குழந்தையை, இந்த நபர் எவ்விதக் கருணையும் இன்றி வேட்டையாடியுள்ளார். இது வெறும் கொலை மட்டுமல்ல; மிருகத்தனமான, மனிதாபிமானமற்ற ஒரு கொடூரச் செயலாகும். இதற்குத் தூக்குத் தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனையும் ஈடாகாது.”
குழந்தையின் தாய் சுதா, இந்தத் துயரச் சம்பவத்தின் ஒரே முக்கியக் கண் கண்ட சாட்சியாக (Eye Witness) இருந்து, நீதிமன்றத்தில் குற்றவாளியின் ஒவ்வொரு கொடூரத்தையும் துணிச்சலுடன் விவரித்தார். மேலும், குழந்தை மயக்கமடைவதற்கு முன்பு குற்றவாளியுடன் மட்டுமே கடைசியாக இருந்தது (Last Seen Together) சட்டப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டது.
அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஃபரா அகிலா அகமட் புவாட் வழக்கை நடத்தினார். 2021 டிசம்பர் 24 அன்று அரங்கேறிய இந்த விபரீதக் கொலை வழக்கில், சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.





















