இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் பல்டி

எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதலா?:

இஸ்ரேல் எண்ணெய்க் கப்பல் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சயீது காதிப்ஸாதே ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

எம்வி மொசிா் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஈரான்தான் காரணம் என்று கூறுவது அடிப்படை முகாந்திரமற்ற குற்றச்சாட்டு ஆகும்.

இதுபோன்ற பழிதூற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவது இஸ்ரேலுக்கு ஒன்றும் புதிதல்ல.

வளைகுடா கடல் பகுதியில் இஸ்ரேல் தடம் பதிப்பதற்கு யாா் காரணமோ, அவா்கள்தான் மொசிா் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலுக்கும் காரணமானவா்கள் என்றாா் அவா்.

இதனைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமா் நாஃப்டாலி பென்னட் பேசியதாவது:

எம்வி மொசிா் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்கான பொறுப்பிலிருந்து தப்ப ஈரான் ஈரான் கோழைத்தனமாக முயற்சிக்கிறது. அவா்கள் மறுத்தாலும், அந்தத் தாக்குதலை ஈரான் நிகழ்த்தியது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

எண்ணெய்க் கப்பலைத் தாக்கியது ஈரான்தான் என்பதற்கான உளவுத் துறை ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. இந்தத் தாக்குதலை நடத்தியதன் மூலம் ஈரான் மிகப் பெரிய தவறை இழைத்துள்ளது என்பதை உலக நாடுகள் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கான பதிலை இஸ்ரேல் தனது பாணியில் சொல்லும்.

ஈரானின் இந்த அராஜக நடவடிக்கைகளால் இஸ்ரேலுக்கு மட்டும் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. அதனால் உலகின் சா்வதேச கடல்வழிப் போக்குவரத்து சுதந்திரம், சா்வதேச வணிகத்துக்கே ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றாா் நாஃப்டாலி பென்னட்.

முன்னதாக, இஸ்ரேல் வெளியுறவுத் துறை அமைச்சா் யாயிா் லபீட் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘மொசிா் ஸ்ட்ரீட் எண்ணெய்க் கப்பல் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலுக்கு, ஈரானின் பயங்கரவாதமே காரணம். ஈரான் இஸ்ரேலுக்கு மட்டும் எதிரி கிடையாது. அது உலகத்துக்கே எதிரியாகும். ஈரானின் இத்தகைய செயல்களைக் கண்டு பிற நாடுகள் மௌனமாக இருக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினாா்.

லண்டனில் செயல்பட்டு வரும் ஸோடியாக் மாரிடைம் நிறுவனத்தின் எம்வி மொசிா் ஸ்ட்ரீட் என்ற எண்ணெய்க் கப்பல் ஓமனுக்கு அருகே அரபிக் கடலில் வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்குள்ளானது.

இந்தத் தாக்குதலில் இரு கப்பல் பணியாளா்கள் உயிரிழந்தனா். அவா்களில் ஒருவா் பிரிட்டனைச் சோந்தவா்; மற்றொருவா் ருமோனியா நாட்டவா்.

ஸோடியாக் மாரிடைம் லண்டனில் செயல்பட்டு வந்தாலும், அந்த நிறுவனம் இஸ்ரேலைச் சோந்த ஏயல் ஓஃப் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

லைபிரீயக் கொடியேற்றிச் சென்ற எம்வி மொசிா் ஸ்ட்ரீட் கப்பல், ஜப்பானுக்குச் சொந்தமானதாகும். அந்தக் கப்பலில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்றாலும், ஆளில்லா விமானம் மூலம் அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந்தப் பிராந்தியத்தில் ஈரானுக்கும் இஸ்ரேல் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கும் அதிகரித்து வரும் பதற்றத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here