நினைத்தது நிறைவேற வைகாசி விசாகம் வழிபாடு

முருகப் பெருமான் அவதரித்த நாள் வைகாசி விசாகம். புராணங்களின் படி, வைகாசி மாதத்தில் வரும் விசாகம் நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் இணைந்து வரும் நாளில் தான் முருகப் பெருமான் சரணவப் பொய்கையில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. ஏராளமான முருக பக்தர்கள் இந்த நாளில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதையும், நேர்த்திக்கடன் நிறைவேற்றுவதையும் வழக்கமாக கொண்டுள்ளார்கள்.வைகாசி விசாகம் அன்று முருகப் பெருமானை மனதார வேண்டி, பால்குடம் எடுப்பது விசேஷம்.

நாம் கொண்டு சென்று பாலால் முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யும் போது, எந்த வேண்டுதல் நிறைவேறுவதற்காக முருகப் பெருமானுக்கு விரதம் இருந்து, பால்குடம் எடுத்தீர்களோ அந்த வேண்டுதலை மனதார சொல்லி வேண்டிக் கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் அடுத்த ஆண்டு வைகாசி விசாகம் வருவதற்குள் உங்களின் வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

ஒருவேளை  உங்களால் வைகாசி விசாகம் அன்று விரதம் இருக்க முடியவில்லை. பால்குடம் எடுக்க முடியவில்லை. முருகன் கோவிலுக்கு சென்று வழிபடவோ, முருகனை தரிசிக்கவோ முடியவில்லை என்றால் அதற்காக கவலைப்பட வேண்டம். வைகாசி விசாகம் அன்று வீட்டில் இருந்தே ஒரே ஒரு எளிய வழிபாட்டினை மட்டும் செய்வதால் முருகப் பெருமானின் அருளையும், அதன் பலனாக வேண்டுதல் நிறைவேறும் பாக்கியத்தையும் பெற முடியும். இந்த ஆண்டு வைகாசி விசாகம் மே 30ம் தேதி சனிக்கிழமை அன்று வருகிறது.

இந்த நாளில் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வையுங்கள். முருகப் பெருமானுக்குரிய மந்திரங்களை மனதார சொல்லி வழிபடுங்கள். முருகப் பெருமானிடம், “இந்த ஆண்டு என்னால் வைகாசி விசாகத்தன்று விரதம் இருக்கவோ, பால்குடம் எடுக்கவோ, கோவிலுக்கு வந்து உன்னை தரிசிக்கவோ முடியவில்லை. மிகவும் தாங்க முடியாத துன்பத்தில் இருக்கிறேன். உன்னுடைய அருளை எனக்கு தந்து, என்னுடைய இந்த வேண்டுதலை நிறைவேற்று கொடு முருகா. அதற்கு நன்றிக்கடனாக அடுத்த ஆண்டு வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து, பால்குடம் எடுக்கிறேன்” என மனமுருகி வேண்டிக் கொள்ளுங்கள்.

வீட்டில் முருகன் விக்ரஹம் அல்லது வேல் இருந்தால் அதற்கு பால் அபிஷேகம் செய்யுங்கள். சந்தனம், பன்னீர் போன்ற குளிர்ச்சி தரும் பொருட்களைக் கொண்டு முருகப் பெருமானுக்கு உங்கள் கைகளால் அபிஷேகம் செய்து வழிபடுங்கள். முடிந்தால் முருகப் பெருமானுக்கு சர்க்கரை பொங்கல் அல்லது பாயசம் நைவேத்தியமாக படைத்து, ஆறு நெய் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபடுங்கள்.

காலை, மாலை இரண்டு வேளையும் இது போல் முருகனை பூஜை செய்து வழிபடுங்கள். இப்படி வழிபடுவதால் உங்களின் நியாயமான வேண்டுதல்கள் எதுவாக இருந்தாலும் அது நிச்சயம் நிறைவேறும். வேண்டுதல் நிறைவேறுவதற்காகவும், வேண்டுதல் நிறைவேறியதற்கு நன்றி கடனாகவும் தான் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகாசி விசாகம் அன்று பால்குடம் எடுத்து சென்று முருகனை வழிபடுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here