( ரெ.மாலினி)
மலாக்கா:
மாநில அரசிலிருந்து விலகுவதாக டிஏபி அதிகாரப்பூர்வமாக ராஜினாமா கடிதங்களைச் சமர்ப்பித்துவிட்டதால், பாரிசான் நேஷனல் மற்றும் டிஏபி இடையிலான பேச்சுவார்த்தைக்கு இனி இடமில்லை என்று முதலமைச்சர் டத்தோஸ்ரீ அப்துல் ராவுப் யூசோப் தெரிவித்துள்ளார்.
நேற்று செவ்வாய்க்கிழமை டிஏபி நடத்திய அவசர செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன், அக்கட்சியின் பிரதிநிதிகள் தங்களது ராஜினாமா கடிதங்களை மாநில அரசிடம் வழங்கியதாக அவர் கூறினார். இதன் மூலம் டிஏபி மாநில அரசிலிருந்து உடனடியாக விலகியதாகவும், அதனை அரசு ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்தார்.
“அதனால்தான் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துமாறு கூறியபோது, அது இனி சாத்தியமில்லை என்று தெரிவித்தேன். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே அனைத்து ராஜினாமா கடிதங்களையும் சமர்ப்பித்துவிட்டனர்,” என்று அவர் இன்று செரி நெகிரி வளாகத்தில் நடைபெற்ற மலாக்கா சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத்தொடர் நிறைவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
நாளை நடைபெறவுள்ள பக்காத்தான் ஹராப்பான் கூட்டத்தில் கூட்டணியின் நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் என அதன் தலைவர் அட்லி சஹாரி தெரிவித்திருப்பது குறித்து கேட்கப்பட்டபோது, “அது தற்போதைய சூழ்நிலையைப் பொறுத்தது. ஆம் அல்லது இல்லை என்று இப்போது கூற முடியாது. ஆனால் டிஏபி இனி அரசுடன் இணைந்து செயல்பட விரும்பவில்லை என்று அறிவித்ததையும், அவர்களின் விலகல் கடிதத்தையும் நாங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டோம்,” என்றார்.
மேலும், பிகேஆர் கட்சியிடமிருந்தும் டிஏபியின் நடவடிக்கைக்கு ஆதரவில்லை என்று தெரிவிக்கும் கடிதம் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு இந்த அரசியல் நெருக்கடி பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு, “ஒவ்வொரு கட்சியும் தங்களது பலம், பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப செயல்பட வேண்டும். அரசியல் முதிர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒருவரை ஒருவர் குறை கூறுவதால் யாருக்கும் பயனில்லை. ஒவ்வொருவரும் தங்களது வலிமை மற்றும் பலவீனத்தை உணர்ந்து, அதற்கேற்ப அரசியல் பாதையைத் தேர்வு செய்ய வேண்டும்,” என்று அப்துல் ரவூப் வலியுறுத்தினார்.



















