இறுதிக் கட்டத்தில் தஞ்சோங் செப்பாட் பன்றிப் பண்ணைகள் மூடல்: சுல்தானின் ஆணைக்கு இணங்க ஜூன் இறுதியில் முழுமைபெறும்

கோலாலம்பூர்:

சிலாங்கூர், தஞ்சோங் செப்பாட் (Tanjung Sepat) பகுதியில் உள்ள பன்றிப் பண்ணைகளை முழுமையாக மூடும் நடவடிக்கை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எஞ்சியுள்ள 11,000 விலங்குகளும் அகற்றப்பட்டு, வரும் ஜூன் இறுதிக்குள் இப்பணிகள் முழுமையாக நிறைவுபெறும் என சிலாங்கூர் மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இன்று சிஜாங்காங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சிலாங்கூர் மாநில உள்கட்டமைப்பு மற்றும் விவசாயத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் (Exco) டத்தோ இஷாம் ஹாஷிம் இந்த விபரங்களை வெளியிட்டார்.

சிலாங்கூர் மாமன்னர் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா (Sultan Sharafuddin Idris Shah) அவர்களின் அரசாணையை மதித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட டத்தோ இஷாம் ஹாஷிம், பண்ணைகள் மூடப்பட்ட பின்னர் சுமார் 141 ஹெக்டர் பரப்பளவிலான அந்த நிலப்பகுதியில் ‘உயர்மதிப்புள்ள விவசாய நடவடிக்கைகளை’ (High-Value Agricultural Activities) மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பண்ணைகள் மூடப்படும் நடைமுறை இறுதிக் கட்டத்தில் இருப்பதால், தற்போது புதிய குட்டிகள் எவையும் பண்ணைக்குள் கொண்டுவரப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் விலங்குகள் அனைத்தும் ரவாங்கிற்கு (Rawang) கொண்டு செல்லப்பட்டு படிப்படியாக அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மூடல் நடவடிக்கையால் பாதிக்கப்படும் 87 பண்ணை நடத்துநர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் மாற்று விவசாயத்திற்கு மாறுவது மற்றும் நிலச் சீரமைப்பு உதவிகளைப் பெறுவது குறித்து விவாதிக்க வரும் ஜூன் 9-ஆம் தேதி ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

வரும் ஜூன் 30-ஆம் தேதியுடன் அனைத்துப் பண்ணைகளும் முழுமையாக அகற்றப்பட்டு, ஜூலை 1-ஆம் தேதி முதல் அங்கு மாற்று விவசாயத் திட்டத்திற்கான முழுமையான சட்ட அமலாக்கம் தொடங்கும் என்று டத்தோ இஷாம் ஹாஷிம் உறுதிபடக் கூறினார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் முறையான நிலப் பயன்பாட்டை நோக்கமாகக் கொண்டு சிலாங்கூர் மாநில அரசு எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அப்பகுதி விவசாயத்துறையில் ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here