கோலாலம்பூர்:
பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணிக்குள் பாஸ் (PAS) மற்றும் பெர்சத்து (Bersatu) ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் பதற்றம் அதிகரித்து வரும் வேளையில், தங்களின் பாஸ் கட்சி தனது அரசியல் கூட்டணிகளுக்கு ஒருபோதும் துரோகம் இழைத்ததில்லை என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மாராங் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர், இறைவனின் கட்டளைகளுக்கும், இறைத்தூதர் முஹம்மது நபியின் போதனைகளுக்கும் உட்பட்டு இருக்கும் வரை, பிற கட்சிகளுடனான தங்களின் அரசியல் கூட்டுறவு ஒருபோதும் மீறப்படாது என்று கூறினார். மலேசியா சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே பல்வேறு கட்சிகளுடன் இணைந்து பாஸ் கட்சி போராடி வந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
“முன்னாள் கூட்டணிக் கட்சியான ஜசெக (DAP) உடனான ‘பக்காத்தான் ராக்யாட்’ கூட்டுறவை பாஸ் கட்சி முறித்துக் கொண்டதற்குக் காரணம், கட்சியின் இஸ்லாமிய கொள்கைகளையும் அடையாளத்தையும் மறைக்குமாறு எங்களுக்குக் கொடுக்கப்பட்ட அழுத்தங்கள்தான். எங்களின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியதாலேயே அன்று அந்த முடிவு எடுக்கப்பட்டது” என்று அவர் தனது FACEBOOK தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
கூட்டணியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இஸ்லாமிய அரசு என்ற இலட்சியத்தையும், அதன் கொள்கைகளையும் தற்காலிகமாக மறைத்து வைக்கலாம் என்ற சில உறுப்பினர்களின் சமரசப் போக்கை (Mujamalah approach) பாஸ் கட்சி முற்றாக நிராகரித்துவிட்டது. உலக அளவில் பல இஸ்லாமிய இயக்கங்கள் இத்தகைய சமரசப் போக்கைக் கையாண்டு, தங்களின் இஸ்லாமிய அடையாளத்தையே இழந்து ‘நீதி’, ‘சுதந்திரம்’, ‘சீர்திருத்தம்’ போன்ற பொதுவான சொற்களுக்குப் பின்னால் ஒளிந்து கொண்ட வரலாற்றில் இருந்து பாஸ் கட்சி பாடம் கற்றுக் கொண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.




















