கோலாலம்பூர், மார்ச் 2-
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஸைனுடின் தொடர்ந்து நீடிப்பதற்கு, பெர்சத்து கட்சியைச் சேர்ந்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது முழுமையான ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதன் மூலம், எதிர்க்கட்சித் தலைவர் மாற்றம் குறித்த கடந்த கால யூகங்களுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பெர்சத்து கட்சியின் கொறடா டத்தோ ஶ்ரீ டாக்டர் ரொனால்ட் கியாண்டி, இது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைமை கொறடா டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசானிடம் நேரில் சமர்ப்பித்தார்.
பிப்ரவரி 24-ஆம் தேதியிட்ட அந்த கடிதத்தில், நாடாளுமன்ற நிலையியல் கட்டளை 4A-இன் கீழ், பெரும்பான்மை உறுப்பினர்களின் கூட்டு முடிவின் அடிப்படையில் ஹம்ஸா ஸைனுடின் இந்த பதவியில் நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாருட் நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்ஸா ஸைனுடினின் தலைமையை 13 உறுப்பினர்களும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.




















