கோலாலம்பூர்:
கடந்த வாரம் சான் சோ லின் (Chan Sow Lin) LRT நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பப் பாதிப்பைத் தொடர்ந்து, அங்கு மேற்கொள்ளப்பட்ட பெரிய அளவிலான பழுதுபார்ப்புப் பணிகளுக்குப் பிறகு, அம்பாங் வழித்தட LRT சேவை நாளை முதல் தற்காலிக முறையில் இயங்கும் என்று Rapid KL இன்று அறிவித்துள்ளது.
புத்ரா ஹைட்ஸ் (Putra Heights) மற்றும் செந்தூல் திமூர் (Sentul Timur) இடையிலான LRT ரயில் சேவைகள் நாளை முதல் எவ்வித இரயில் மாற்றமும் (Transfers) இன்றி நேரடியாக மீண்டும் தொடங்கும் என்று ரபிட் கேஎல் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும், அம்பாங் மற்றும் செந்துல் திமூர் இடையே பயணிக்கும் பயணிகள், சான் சோ லின் எல்ஆர்டி நிலையத்தில் மட்டும் ஒருமுறை இரயில் மாற வேண்டியிருக்கும். இதனால், பணிக்குச் செல்லும் நெரிசல் மிகுந்த நேரங்களில் (Peak Hours) பயண நேரம் கூடுதலாக 5 நிமிடங்கள் மட்டுமே அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட விடுமுறைக்குப் பிறகு பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தற்காலிகச் செயல்பாட்டு முறையின் கீழ், பயணிகளின் பயணம் தடையின்றி சீராக அமைவதை உறுதிசெய்ய முக்கிய நிலையங்களில் ரபிட் கேஎல் உதவிப் பணியாளர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
இந்தத் தற்காலிகச் செயல்பாட்டுக்கு ஆதரவாக, பின்வரும் இரு வழித்தடங்களில் 10 இலவசப் பேருந்துகள் (Feeder Shuttle Buses) இயக்கப்படும்:
சான் சோ லின் – மஸ்ஜித் ஜமேக் – பண்டாராயா (Chan Sow Lin – Masjid Jamek – Bandaraya)
சான் சோ லின் – மெலுரி – பாண்டான் ஜெயா – அம்பாங் (Chan Sow Lin – Maluri – Pandan Jaya – Ampang)
போக்குவரத்து நெரிசலைப் பொறுத்து, இந்தப் பேருந்து சேவைகள் 15 முதல் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
பாதிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் அனைத்தும் முற்றிலுமாக அகற்றப்பட்டு, முழுமையான ஆய்வு மற்றும் மதிப்பீட்டிற்காகப் பணிமனைக்குக் (Depot) கொண்டு செல்லப்பட்டுள்ளன. ரபிட் கேஎல்லின் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் பழுதுபார்ப்புப் பணிகளை முடித்து, பாதிக்கப்பட்ட உதிரிபாகங்களை மாற்றி அமைப்பைச் சீரமைத்துள்ளனர்.
பாதுகாப்புத் தரநிலைகளை உறுதி செய்வதற்கான கூடுதல் ஆய்வுகளும், தொழில்நுட்பச் சரிபார்ப்புகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களைச் சீராக அமைத்துக்கொள்ள, ரபிட் கேஎல்லின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் ‘MyRapid PULSE’ செயலியைப் பின்தொடருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.




















