(ரெ. மாலினி)
மலாக்கா:
மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் காலியாக உள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநர் (முன்னர் அமைப்பாளர் என அழைக்கப்பட்ட) பதவியை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மேலாளர் வாரியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மேலாளர் வாரியக் கூட்டமைப்பும், மலாக்கா மாநிலத் தமிழ்ப்பள்ளிகள் மேலாளர் வாரியச் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்த கள ஆய்வுக் கூட்டம் கடந்த மே 30ஆம் தேதி மலாக்கா தமிழர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் தோக்கோ குரு டத்தோ இராஜமாணிக்கம் கருப்பையா, தலைமையில் நடைபெற்றது .
மலாக்கா மாநிலத் தலைவர் ஆர். ஆனந்தன், செயலாளர் எம்.ஆர். இராமச்சந்திரன், கெடா மாநிலச் செயலாளர் கோ. குமரன், மலாயா தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தேசிய சங்க மலாக்கா மாநிலத் தலைவர் ஆர். பரமசிவம், முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ வீரா ஆர். பெருமாள், முன்னாள் இடைநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் கே. நாராயணசாமி, முன்னாள் தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் எம். சுப்ரமணியம், டத்தோ கண்ணன், மலாக்கா தமிழர் சங்கத் தலைவர் எஸ். குணசேகரன் உள்ளிட்ட கல்வியாளர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் பங்கேற்று கருத்துக்களை முன்வைத்தனர்.
கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சமாக, மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநர் பதவி கடந்த ஜனவரி 2020 முதல் இன்று வரை நிரப்பப்படாமல் இருப்பது குறித்து கவலை தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 2, 2020ஆம் ஆண்டு முன்னாள் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ வீரா இராகவன் தலைமையில் முன்னாள் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் மாநிலக் கல்வி இயக்குநரை நேரில் சந்தித்து மனு அளித்திருந்த போதிலும், கடந்த ஏழு ஆண்டுகளாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூட்டமைப்பு வேதனை வெளியிட்டது.
மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவின் இந்த அலட்சியப் போக்கை மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் மேலாளர் வாரியக் கூட்டமைப்பு கடுமையாகக் கண்டிப்பதாக டத்தோ இராஜமாணிக்கம் கருப்பையா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், நெகிரி செம்பிலான், ஜோகூர் மற்றும் பஹாங் ஆகிய மாநிலங்களில் தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநர் பதவி தொடர்ந்து செயல்பாட்டில் இருந்து வருவதாகவும், மலாக்காவில் மட்டும் அந்தப் பதவி காலியாக இருப்பது ஏன் என்ற கேள்வியையும் எழுப்பினார்.
மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பிருந்தே அனைத்து மாநிலங்களிலும் தமிழ்ப்பள்ளிகளுக்கான அமைப்பாளர் பதவி உருவாக்கப்பட்டு பின்னர் உதவி இயக்குநர் பதவியாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 1939ஆம் ஆண்டில் கெடாவில், 1946ஆம் ஆண்டில் பினாங்கில், 1947ஆம் ஆண்டில் பேராக் மற்றும் பஹாங்கில், 1950ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலானிலும் மலாக்காவிலும், 1952ஆம் ஆண்டில் சிலாங்கூரிலும் இப்பதவிகள் நிறுவப்பட்டுள்ள வரலாற்றுத் தகவல்களும் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.
தற்போது மற்ற மாநிலங்களில் உதவி இயக்குநர்கள் பணியாற்றி வருகின்ற நிலையில், மலாக்கா மாநிலத்தில் மட்டும் 2020ஆம் ஆண்டு முதல் அந்தப் பதவி காலியாக இருப்பது கல்வி சமூகத்தினரிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பதவி இல்லாத காரணத்தால் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் சங்கங்கள் மற்றும் பள்ளி மேலாளர் வாரியங்கள் பல்வேறு நிர்வாக மற்றும் கல்வி சார்ந்த சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், மலாக்காவில் இயங்கி வரும் 21 தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி முன்னேற்றம் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் வெளியிடப்பட்டது.
மலேசியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பே தமிழ்க் கல்விக்காக மாநிலக் கல்வி இலாகாவில் உருவாக்கப்பட்டிருந்த ஒரு முக்கியமான உயர்பதவி எவ்வாறு காணாமல் போனது என்ற கேள்வியையும் பங்கேற்பாளர்கள் எழுப்பினர்.
கூட்டத்தின் இறுதியில், மலாக்கா மாநிலக் கல்வி இலாகாவில் தமிழ்ப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநர் பதவிக்கு தகுதியான தமிழ் கல்வி அதிகாரி ஒருவரை மலேசியக் கல்வி அமைச்சு உடனடியாக நியமிக்க வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன், இந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் மற்றும் மடானி அரசாங்கத்தின் கவனத்திற்கும் உடனடியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.




















