கோலாலம்பூர்:
உலகளாவிய ‘அறிவார்ந்த நகரங்கள்’ (Smart City Index) குறியீட்டுப் பட்டியலில், மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சர்வதேச அளவில் 65-ஆவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது என்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்துள்ளார்.
தித்திவாங்சா லேக் கார்டனில் (Titiwangsa Lake Gardens) இன்று காலை நடைபெற்ற ‘கோலாலம்பூர் கட்டடக்கலை விழா 2026’-இன் வெப்பமண்டலப் பழங்கள் அரங்கு தொடக்க விழாவில் கலந்துகொண்டு பேசியபோதே அமைச்சர் இந்த மகிழ்ச்சியான விபரங்களைப் பகிர்ந்துகொண்டார். இத்தொடக்க விழாவில் கூட்டரசுப் பிரதேசங்களின் அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் கோலாலம்பூர் மேயர் டத்தோ ஃபட்லூன் மக் உஜுட் ஆகியோரும் உடனிருந்தனர்.
உலகில் உள்ள ஆயிரக்கணக்கான முன்னணி நகரங்களுடன் போட்டியிட்டு கோலாலம்பூர் 65-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது ஒரு மைல்கல் என்று குறிப்பிட்ட அமைச்சர் ங்கா, “கூட்டரசுப் பிரதேசங்களின் அமைச்சர் ஹன்னா இயோ மற்றும் மேயர் ஃபட்லூன் ஆகியோரின் திறமையான கூட்டுத் தலைமையின் கீழ், கோலாலம்பூர் மிக விரைவில் உலகின் முதல் 50 சிறந்த ஸ்மார்ட் சிட்டி நகரங்களின் பட்டியலுக்குள் முன்னேறிவிடும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது,” என்று கூறினார்.
மாஸ்டர்கார்டு (Mastercard) நிறுவனத்தின் உலகளாவிய தரவுகளின்படி, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும் உலகின் மிக பிரபலமான முதல் 10 நகரங்களில் ஒன்றாகக் கோலாலம்பூர் திகழ்கிறது. அதுமட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான வானுயரக் கட்டடங்களைக் (Skyscrapers) கொண்ட நகரங்களின் பட்டியலில் உலகளவில் கோலாலம்பூர் 4-ஆவது இடத்தை எட்டியுள்ளது. தற்போது தலைநகரில் 150 மீட்டருக்கும் மேல் உயரமுள்ள மொத்தம் 494 கட்டிடங்கள் வானுயரக் கட்டடங்களாகத் தகுதி பெற்றுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தித்திவாங்சா பூங்காவில் இன்று முதல் வரும் டிசம்பர் மாதம் வரை பொதுமக்களைக் கவரும் வகையில் சுமார் 12 இருவழித் தொடர்பு (Interactive Pavilions) கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன. வழக்கமான எல்லைகளைக் கடந்து, பொது இடங்களில் கட்டடக்கலை எவ்வாறு பொதுமக்களோடு அர்த்தமுள்ள வகையில் இணைகிறது என்பதற்கு இதுவொரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நிறைவாகப் பேசிய அமைச்சர், “மக்களுக்குப் பாதுகாப்பான, வாழத் தகுந்த மற்றும் அவர்கள் நேசிக்கக்கூடிய நகர்ப்புறச் சமூகங்களை உருவாக்கவே எங்களது அமைச்சு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. பொருளியல் ரீதியாகச் செழிப்பானதாகவும், மீள்திறன் கொண்டதாகவும், கலாசார வெளிப்பாடுகள் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களையும் உள்ளடக்கிய ஒரு சிறந்த நகர்ப்புறச் சூழலாகக் கோலாலம்பூரை மாற்றுவதே எங்களின் முதன்மை நோக்கமாகும்,” என்று உறுதியளித்தார்.



















