(ரெ. மாலினி)
மலாக்கா:
ஜாசின் 16½ மைல், கம்போங் இந்தியாவில் அமைந்துள்ள அருள்மிகு தேவி ஸ்ரீ கரு மகா காளியம்மன் ஆலயம், ஆயிரக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக் கோட்டையாக விளங்கி வருகிறது. பக்தர்களின் துயரங்களைத் துடைத்து, வாழ்க்கையில் நிம்மதி, வளம் மற்றும் வெற்றியை அருளும் சக்தி வடிவான அன்னையின் 53ஆம் ஆண்டு மகா திருவிழா எதிர்வரும் ஜூன் 13மற்றும் 14 ஆகிய தேதிகளில் ஆன்மிக எழுச்சியுடன், பக்தி வெள்ளத்தில் நடைபெறவுள்ளது.

கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் கரு மகா காளியம்மன், தனது திருவருளால் எண்ணற்ற பக்தர்களின் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்திய தாயாகப் போற்றப்படுகிறார். வாழ்க்கையில் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகள், திருமணத் தடை, தொழில் நஷ்டம், கடன் சுமை, உடல்நலக் குறைவு, மன அழுத்தம் மற்றும் பல்வேறு துன்பங்களால் பாதிக்கப்பட்டவர்கள் அன்னையின் திருவடியில் சரணடைந்து வேண்டிக் கொண்டபின் நன்மை பெற்ற அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்.

இந்த ஆலயம் வெறும் வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல், பலரின் வாழ்வில் நம்பிக்கையை விதைக்கும் ஆன்மிகத் தலமாகவும் திகழ்கிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் நடைபெறும் தீச்சட்டி வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பக்தர்கள் தங்களது மனக்குறைகளையும் துயரங்களையும் அன்னையிடம் சமர்ப்பித்து, தீச்சட்டி ஏந்தி ஆலயப் பிரகாரத்தைச் சுற்றி வரும் இந்த வழிபாடு பல தலைமுறைகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆலயத்தின் தலைவரும் காளி உபாசகருமான க. மகாலிங்கம் சாஸ்திரிகள், பக்தர்களின் வேண்டுதல்களுக்காக அருள்வாக்கு வழங்கி வழிகாட்டி வருகிறார். அவரது ஆன்மிக வழிகாட்டுதலால் பலர் வாழ்க்கையில் புதிய மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் கண்டுள்ளதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

52ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு ஆலயம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அன்னையின் சந்நிதி சிறப்பு அலங்காரங்களால் ஜொலிக்க, பக்தர்களின் பக்தி பாடல்கள் மற்றும் வேத மந்திர ஓசைகள் ஆன்மிகச் சூழலை உருவாக்கவுள்ளன.
திருவிழா நிகழ்ச்சிகள் ஜூன் 12ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு முகூர்த்தக்கால் ஊன்றுதல் மற்றும் ஹோமத்துடன் ஆரம்பமாகின்றன. தொடர்ந்து ஜூன் 13ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர ஹோமம் நடைபெறும். இரவு 7 மணிக்கு வாஸ்து சாந்தி மற்றும் பலி பூஜைகள் நடைபெறவுள்ளன.





















