கோலாலம்பூர்:
உள்ளூர் வணிகத் துறைகளை வெளிநாட்டினர் ஆக்கிரமித்து ஏகபோகமாக நடத்துவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கோலாலம்பூரில் நடத்தப்பட்ட ‘ஓப் பெலாஞ்சா’ (Op Belanja) மற்றும் ‘ஓப் செலேரா’ (Op Selera) ஒருங்கிணைந்த அதிரடிச் சோதனையில் 30 வெளிநாட்டுப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் அமலாக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விடுத்த உத்தரவின் பேரில், மலூரி, பந்தாய் டாலாம் மற்றும் சிகாம்புட் டாலாம் ஆகிய பகுதிகளில் உள்ள 16 வணிக வளாகங்கள் சோதனையிடப்பட்டன.
இச்சோதனையில் தங்களின் வேலை அனுமதியைத் தவறாகப் பயன்படுத்தி மளிகைக் கடைகள், உணவகங்கள் போன்றவற்றில் கெஸியர்களாகவும், பொதுப் பணியாளர்களாகவும் பணிபுரிந்த வங்காளதேசம் (19), இந்தோனேசியா (5), இந்தியா (3), பாகிஸ்தான் (1) மற்றும் மியன்மார் (1) ஆகிய நாடுகளைச் சேர்ந்த 29 ஆண்கள், ஒரு பெண் என மொத்தம் 30 பேர் குடி நுழைவு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
மேலும், வணிக விதிமுறைகளை மீறியதற்காக மலேசிய நிறுவனங்களின் ஆணையம் (SSM) 15 ஆய்வு அறிவிப்புகளை வழங்கியுள்ள வேளையில், விலை, எடைக் கருவிகள் தொடர்பான குற்றங்களுக்காக உள்நாட்டு வாணிபம் வாழ்க்கைச் செலவின அமைச்சு RM6,500 மதிப்பிலான 10 அபராதங்களை விதித்துள்ளது.




















