மலேசியாவை மையமாக வைத்து ஐரோப்பாவிற்குப் போதைப்பொருள் கடத்தல்: 6 மாதங்களில் 653 கிலோ கஞ்சா மொட்டுகள் பறிமுதல் – 38 பேர் கைது!

கோலாலம்பூர்:

டப்பு 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் (KLIA) மொத்தம் 653.6 கிலோகிராம் எடையுள்ள உயர்ரகக் கஞ்சா மொட்டுகளைப் (Cannabis buds) போலீசார் பறிமுதல் செய்துள்ளதோடு, கடத்தலில் தொடர்புடைய 38 பேரைக் கைது செய்துள்ளனர்.

நாட்டின் முதன்மை நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில், அரச மலேசியக் காவல்துறையும் (PDRM) கேஎல்ஐஏ பாதுகாப்பு அதிகாரிகளும் இணைந்து நடத்திய தொடர் கூட்டுச் சோதனை நடவடிக்கைகளின் மூலமே இந்த மெகா வெற்றி சாத்தியமாகியுள்ளது என்று சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஷாசெலி கஹார் தெரிவித்துள்ளார்.

இன்று சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,”விமான நிலையத்தில் சோதனைகளும் கண்காணிப்புகளும் தீவிரப்படுத்தப்பட்டதன் விளைவாகவே இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை எங்களது சோதனைகள் தளர்த்தப்பட்டிருந்தால், இந்த அளவிற்குப் போதைப்பொருட்களைப் பறிமுதல் செய்திருக்க முடியாது என்று டத்தோ ஷாசெலி கஹார் கூறினார்.

விசாரணையில், இந்த உயர்ரகக் கஞ்சா மொட்டுகள் பல தென்கிழக்கு ஆசிய (ASEAN) நாடுகளில் இருந்து மலேசியாவிற்குள் கொண்டு வரப்பட்டு, பின்னர் இங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குக் கடத்தப்படவிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.”

கைது செய்யப்பட்ட 38 சந்தேக நபர்களில், 28 பேருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கடத்தல் கும்பல்களின் நெட்வொர்க் மற்றும் ஒவ்வொரு நாட்டின் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இதன் விலை மாறுபடுவதால், ஒட்டுமொத்த போதைப்பொருளின் மதிப்பைத் துல்லியமாகக் கணக்கிடுவது கடினம் என்றும் அவர் கூறினார்.

கடந்த ஜூன் 17 முதல் 22-ஆம் தேதி வரை கேஎல்ஐஏ விமான நிலையத்தில் நடத்தப்பட்ட மிக அண்மைய அதிரடி நடவடிக்கையின் போது, மூன்று வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் RM13.73 மில்லியன் மதிப்பிலான 171.6 கிலோ கஞ்சா மொட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இச்சம்பவத்தில் போதைப்பொருள் கடத்தும் ‘குருவியாக’ (Drug Mule) செயல்பட்ட ஒரு மலேசியர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கேஎல்ஐஏ டெர்மினல் 1, நெகிரி செம்பிலான் பண்டார் என்ஸ்டெக்கில் உள்ள ஒரு ஹோட்டல் மற்றும் போதைப்பொருள் சேமிப்புக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட கோலா லங்காட், பாண்டிங்கில் உள்ள ஒரு வீடு ஆகிய இடங்களில் இந்தச் சோதனைகள் நடத்தப்பட்டன.

இச்சோதனையின் போது ஒரு சொகுசு கார் (SUV) மற்றும் பல நாட்டு வெளிநாட்டுப் பண நோட்டுகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் தற்போது 7 நாட்கள் போலீஸ் ரிமாண்டில் வைக்கப்பட்டுள்ளதோடு, இந்த வழக்கு 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் பிரிவு 39B-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here