பிச்சை எடுக்கும் வெளிநாட்டினர் பின்னால் பெரும் கும்பல்: கோலாலம்பூரில் 42 பேர் கைது; KDN தகவல்!

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், குறிப்பாகக் குழந்தைகள் உட்பட வெளிநாட்டினர் பிச்சை எடுக்கும் நடவடிக்கைகள், திட்டமிடப்பட்ட குற்றவியல் கும்பல்கள் அல்லது மாஃபியா கும்பல்களுடன் (Syndicates) தொடர்புடையதாக இருக்கலாம் என உள்நாட்டு வாணிப அமைச்சு (KDN) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நாடாளுமன்ற அகப்பக்கத்தில் வெளியிடப்பட்ட எழுத்துப்பூர்வ பதிலில், 2025-ஆம் ஆண்டு முதல் கடந்த மே 31-ஆம் தேதி வரை கோலாலம்பூர் பகுதிகளில் குடிநுழைவுத் துறை (Immigration Department) 836 அமலாக்கச் சோதனைகளை நடத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச்சோதனைகளின் போது 10,609 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதில், குடிவரவு விதிமீறல்களுக்காக 5,411 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 42 பேர் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆவர்.

சுற்றுலாத் தலங்களில் கண்காணிப்பு: புக்கிட் பிந்தாங் (Bukit Bintang), ஜாலான் ஆலூர் (Jalan Alor), சங்காட் புக்கிட் பிந்தாங் போன்ற முக்கிய சுற்றுலாத் தலங்களில் வெளிநாட்டுப் பிச்சைக்காரர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த ‘கேஎல் ஸ்டிரைக் ஃபோர்ஸ்’ (KL Strike Force) குழு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

இந்த வெளிநாட்டினரைப் பின்னணியில் இருந்து இயக்கும், அவர்களுக்கு அடைக்கலம் தரும் அல்லது இதன் மூலம் லாபம் ஈட்டும் மலேசிய உள்ளூர்வாசிகள் மீதும் கடுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இத்தகைய கும்பல்களின் நெட்வொர்க்கை உடைக்கக் காவல்துறை (PDRM), கோலாலம்பூர் நகராண்மை கழகம் (DBKL) மற்றும் சமூக நலத்துறை (JKM) ஆகிய அமைப்புகள் இணைந்து உளவுத் தகவல்களைப் பகிர்ந்து கூட்டுச் சோதனைகளை அதிகரித்து வருகின்றன.

நாட்டின் பாதுகாப்பிற்கும் நற்பெயருக்கும் களங்கம் விளைவிக்கும் இத்தகைய சுரண்டல் மற்றும் சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை தொடரும் என அமைச்சு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here