மலாக்காவில் கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கி வீரர் உயிரிழப்பு .நடுவர் காயம்

(ரெ.மாலினி)

மலாக்கா:

அலோர் காஜா , லெண்டு ராக்கான் மூடா வளாக கால்பந்து மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்ற நட்புறவு கால்பந்து போட்டியின்போது மின்னல் தாக்கியதில் 28 வயதான ஆர். தனேஷ் என்ற வீரர் உயிரிழந்தார். மேலும், போட்டி நடுவர் ஒருவர் காயமடைந்த நிலையில், மற்றொருவர் உயிர் தப்பினார்.

மாலை சுமார் 5.40 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மழைத்தூறல் பெய்துக் கொண்டிருந்தபோது பலத்த இடி முழங்கியதையடுத்து, ஆர். தனேஷ் மற்றும் மேலும் இருவர் மைதானத்தில் மயங்கி விழுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மயக்க நிலையில் அலோர் காஜா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஆர். தனேஷ், அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றபோதும் உயிரிழந்தார். காயமடைந்த நடுவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மூன்றாவது நபர் நலமாக இருந்ததால் மருத்துவ சிகிச்சை பெறவில்லை.

அலோர் காஜா மாவட்ட காவல்துறைத் தலைவர், சூப்பிரண்டெண்ட் அக்மாட் அபு பக்கார் கூறுகையில் உயிரிழந்தவரின் உடலில் குற்றச்செயலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், இடது காலின் விரலிலிருந்து தொடை வரை தீக்காயங்களும், இடது கீழ் வயிற்றுப் பகுதியில் தீக்காயங்களும், முதுகுப் பகுதியில் கருகிய தடயங்களும், வலது காதில் இரத்தக்கசிவும் காணப்பட்டதாக தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் திடீர் மரணம் எனப் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here