கோலாலம்பூர்:
வரும் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெறவுள்ள ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிப்பதற்காக வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூரில் வேலை செய்யும் 3 இலட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் ஜோகூருக்கு பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனையடுத்து, நெடுஞ்சாலைகளில் ஏற்படக்கூடிய கடும் போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்கு மலேசிய நெடுஞ்சாலை வாரியம் (LLM) தீவிர ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஜோகூருக்குள் செல்பவர்கள் அல்லது அவ்வழியாகப் பயணம் மேற்கொள்பவர்கள், முக்கியப் பாதைகளில் நெரிசலில் சிக்காமல் இருக்கத் தங்களது பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு மலசிய நெடுஞ்சாலை வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ ஹஸ்னி முகமட் கேட்டுக்கொண்டுள்ளார்.
வாக்காளர்கள் பாதுகாப்பாகவும் சுமுகமாகவும் பயணம் செய்வதை உறுதிசெய்யும் பொருட்டு, அவசரப் பணிகளைத் தவிர்த்து, சனிக்கிழமை வாக்களிப்பு நாளன்று நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ளப்படும் சாலை புணரமைப்பு பணிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படும் என்றும், வாகன ஓட்டிகள் தங்களது பயணங்களைத் திட்டமிட ‘துஜு’ (TuJu) செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும், வாகனங்கள் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்வதோடு, தங்களின் ‘டச் அண்ட் கோ’ (Touch ‘n Go) கணக்குகள், மின்-பணப்பைகள் (e-wallets) மற்றும் கடன்பற்று அட்டைகளில் (Debit Cards) போதிய பணம் இருப்பதை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ள வேண்டும் எந்றம் அது தெரிவித்துள்ளது.
நெடுஞ்சாலையைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் வேகக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்குமாறும், குறிப்பாகச் சிம்பாங் ரெங்கம் – செனாய் இடையிலான 3-ஆவது வழித்தட கட்டுமானப் பகுதிகளில் கூடுதல் கவனத்துடன் வாகனங்களை இயக்குமாறும் வலியுறுத்தப்படுகிறார்கள்.
நெடுஞ்சாலைப் போக்குவரத்து நிலவரம் மற்றும் அசம்பாவிதங்கள் குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள, மலேசிய நெடுஞ்சாலை வாரியத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கம், ‘@llmtrafik’ என்ற டிக்டாக் கணக்கு அல்லது 1-800-88-7752 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
மேலும், நேரடிச் சிசிடிவி (CCTV) காட்சிகளை www.llm.gov.my இணையதளத்திலும், ‘LLM Info Trafik’ வாட்ஸ்அப் ஒளிவழி (WhatsApp Channel) மூலமாகவும் பொதுமக்கள் பார்வையிடலாம் என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.




















