(கோகி கருணாநிதி)
ஜோகூர்:
தேசிய ம.இ.கா. தலைவர் டான் ஸ்ரீ ச. விக்னேஸ்வரன், ஜோகூர் மாநில ம.இ.கா. தலைவர் கி. ரவீன் குமார் ஆகியோரின் தலைமையில், 16ஆவது ஜோகூர் மாநில சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா. சார்பில் போட்டியிட்ட நான்கு வேட்பாளர்களும் அபார வெற்றி பெற்றிருப்பது கட்சிக்கும் இந்திய சமூகத்திற்கும் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக செகிஜாங் தொகுதி ம.இ.கா. நிரந்தரத் தலைவர் ராமதாஸ் சுந்தரம் தெரிவித்தார்.
இத்தேர்தலில் கெமெலா தொகுதியில் கி. ரவீன் குமார், காஹாங் தொகுதியில் வே. ருகேந்திரன், பெர்லிங் தொகுதியில் பி. பன்னீர்செல்வம், புக்கிட் பத்து தொகுதியில் ஆர். குமரன் ஆகியோர் வெற்றி பெற்று ம.இ.கா.வின் பிரதிநிதித்துவத்தை வலுப்படுத்தியுள்ளனர்.
இந்த வெற்றி ஒரு முடிவு அல்ல; மாறாக, மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்ற வேண்டிய புதிய பொறுப்பின் தொடக்கமாகும். வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் மக்களின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயல்பட்டு, குறிப்பாக இந்தியச் சமூகத்தின் தேவைகள், உரிமைகள், எதிர்பார்ப்புகளுக்கான வலுவான குரலாகத் திகழ்வார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அதேவேளை, இந்தியச் சமூகத்தின் நலன் மட்டுமின்றி, ‘பங்சா ஜோகூர்’ உணர்வுடன் இன வேறுபாடுகளைக் கடந்து அனைத்து மக்களின் நலன், வளர்ச்சி, முன்னேற்றத்திற்காகவும் இந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களும் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றுவார்கள் என்று ராமதாஸ் சுந்தரம் கூறினார்.
இந்த வெற்றிக்காக உழைத்த கட்சித் தலைமை, தேர்தல் இயந்திரம், தொண்டர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், குறிப்பாக ம.இ.கா. வேட்பாளர்கள் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
வெற்றி பெற்ற நான்கு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்த ராமதாஸ் சுந்தரம், மக்கள் வழங்கியுள்ள ஆதரவையும் நம்பிக்கையையும் பொறுப்புடன் காத்து, இந்தியச் சமூகத்தின் குரலாகவும் ‘பாங்ச ஜோகூர்’ மக்களின் முன்னேற்றத்திற்கான பிரதிநிதிகளாகவும் அவர்கள் சிறப்பாகச் செயல்படுவார்கள் என்றார்.



















