கொழும்பு, ஏப்ரல் 3 :
இலங்கையில் அவசரகாலம் அமலில் உள்ள நிலையில், நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கும் மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும் நேற்று நள்ளிரவு முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியயுள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை அரசு சிக்கிகியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பி இருந்த நிலையில், அன்னியச் செலாவணியில்லாததால், இறக்குமதி பாதித்தது. உணவுப் பொருட்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
மேலும், இலங்கையில் தினமும் 13 மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் தெருவில் இறங்கி போராடினார்கள்.
கடந்த 31-ம் தேதி கொழும்பு நகரில் அதிபர் மாளிகை முன் ஆயிரக்கணக்கானோர் கூடி அதிபருக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கண்ணீர்ப் புகைகுண்டுகளை வீசி மக்களை விரட்டியடித்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையே, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் அவசர நிலையை அமல்படுத்தினார். நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தவறான தகவல்களைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாட்டில் போராட்டங்களைத் திட்டமிடுவதற்கு மக்களைத் திரட்டுவதைத் தடுக்கவும் நேற்று நள்ளிரவு முதல் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் மூத்த பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனால் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களை இலங்கை அரசாங்கம் முடக்கியயுள்ளது.
























