கோலாலம்பூர்:
ஷா ஆலாம், கம்போங் ஜாவாவில் உள்ள காகித ஆலை ஒன்றில் அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், அங்குள்ள கன்டெய்னர் (Container) விடுதியில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த 50 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை 1.46 மணியளவில் இந்தத் தீ விபத்து குறித்து அவசர அழைப்பு வந்ததாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (JBPM) உதவி செயல்பாட்டு இயக்குநர் அஷ்ருல் ரிசால் அஸ்பார் தெரிவித்தார்.
குறித்தி ஆலையின் அடிப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த காகிதக் குவியலில் இருந்து இந்தத் தீ பரவத் தொடங்கியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் ஆலையின் 30 விழுக்காட்டுப் பகுதி சேதமடைந்துள்ளது.
தீயணைப்பு நீர் விநியோகக் குழாய் (Hydrant) விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 1,000 அடி தூரத்தில் இருந்ததாலும், அந்த ஆலையில் முறையான தீத்தடுப்பு அமைப்பு இல்லாததாலும் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது.
தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகிலேயே ‘பெட்ரோனாஸ்’ (Petronas) நிறுவனத்திற்குச் சொந்தமான எரிவாயு குழாய்த்தடம் (Gas pipe route) சென்றதால் பெரும் ஆபத்து ஏற்படும் அபாயம் நிலவியது. எனினும், தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் அதிகாலை 2.50 மணியளவில் தீ மற்ற இடங்களுக்குப் பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டது.
இச்சம்பவத்தில் யாருக்கும் காயமோ அல்லது உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. தொழிலாளர்கள் அனைவரும் சரியான நேரத்தில் தப்பி ஓடி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர். இன்று காலை 7.30 மணி வரை காகிதக் குவியல்களின் அடியில் இருக்கும் எஞ்சிய நெருப்பை முழுமையாக அணைக்கும் பணி தொடர்ந்த வேளையில், ஜேசிபி (JCB) இயந்திரங்களின் உதவியுடன் காகிதங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இப்போராட்டம் மாலை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



















