பெட்டாலிங் ஜெயாவில் யூடியூபர் மீது கொடூரத் தாக்குதல்; வீடியோ எடுத்துவிட்டு தப்பிய இரு மர்ம நபர்களுக்குப் போலீஸ் வலைவீச்சு!

கோலாலம்பூர்:

இங்குள்ள பண்டார் ஸ்ரீ டாமன்சாரா (Bandar Sri Damansara) அருகே உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில், பிரபல யூடியூபரும் காற்பந்து வர்ணனையாளருமான ஒருவர் இரு அடையாளம் தெரியாத நபர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை நடந்த இச்சம்பவம் குறித்து அன்று இரவு 7.56 மணியளவில் போலீசாருக்குப் புகார் கிடைத்ததாகப் பெட்டாலிங் ஜெயா மாவட்ட காவல்துறைத் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் (ACP) ஷம்சுடின் மாமத் தெரிவித்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க அந்த யூடியூபர், தனது காரின் சக்கரங்களுக்குக் காற்று நிரப்புவதற்காக அங்கு நிறுத்தியுள்ளார். அப்போது ‘யமஹா எல்சி’ (Yamaha LC) மோட்டார் சைக்கிளில் வந்த இரு மர்ம நபர்கள் அவரை அணுகியுள்ளனர்.

அந்த நபர்கள் யூடியூபரை இரக்கமின்றித் தொடர்ந்து தாக்கியுள்ளனர். அத்தோடு நில்லாமல், தாங்கள் தாக்கியதை வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் கண் குழி எலும்பில் முறிவு (Fractured eye socket) ஏற்பட்டதுடன், மேலும் பல கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

இத்தாக்குதலின் பின்னணியில் உள்ள நோக்கம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. தலைமறைவாக உள்ள அந்த இருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது இச்சம்பவம் குறித்துக் கடுமையான காயத்தை விளைவித்த குற்றத்திற்காகக் குற்றவியல் சட்டம் பிரிவு 325-இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here