கோலாலம்பூர்:
ஜோகூர், ஃபோரஸ்ட் சிட்டியில் (Forest City) உள்ள சர்வதேசக் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில், அங்கு தங்கியிருந்த 266 வெளிநாட்டினரும் தற்போதைய பதிவுகளின்படி முறையான மற்றும் செல்லுபடியாகும் குடியேற்ற ஆவணங்களைக் கொண்டுள்ளனர் என்று மலேசியக் குடிநுழைவுத்துறை (Immigration Department) அறிவித்துள்ளது.
நேற்று நடத்தப்பட்ட இந்தச் சோதனையில் 40 நாடுகளைச் சேர்ந்த 266 நபர்கள் பரிசோதிக்கப்பட்டதாகக் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஜகாரியா ஷாபான் குறிப்பிட்டார்.
இஸ்கந்தார் புத்திரி மாநகர மன்றம், மலேசியத் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC), ஜோகூர் மாநிலச் செயலக அலுவலகம் மற்றும் போலீசார் ஆகியோருடன் இணைந்து இந்த ஒருங்கிணைந்த சோதனை நடத்தப்பட்டது என்று அவர் சொனார்.
முதற்கட்ட சோதனையில் அனைவரின் ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்தாலும், அவர்கள் நுழைவு நிபந்தனைகள், குடியேற்றச் சட்டம் 1959/63 மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களை முழுமையாகப் பின்பற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த மேல் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அடையாளங்கள், பயண ஆவணங்கள் அல்லது குடியேற்ற வசதிகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் விசா விதிகளின் மீறல்கள் குறித்து ஏதேனும் புதிய தகவலோ அல்லது சந்தேகமோ எழுந்தால், அது குறித்துக் கடுமையான விசாரணை நடத்தப்படும் என்று ஜகாரியா எச்சரித்தார். குடியேற்றச் சட்டங்களை மீறுபவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி சட்ட நடவடிக்கை பாயும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஃபோரஸ்ட் சிட்டியில் இயங்கி வரும் ‘நெட்வொர்க் ஸ்கூல்’ (Network School) என்ற தொழில்நுட்பக் கூட்டுத் தங்குமிட சமூகத் திட்டத்தில், மலேசியாவிற்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டின் பிரஜைகள், பிற நாடுகளின் பாஸ்போர்ட்டுகளைப் பயன்படுத்திப் பங்கேற்றதாக சமூக ஊடகங்களில் புகார்கள் எழுந்தன.
இதனைத் தொடர்ந்து, அங்குள்ளவர்களின் உண்மையான அடையாளங்கள், பயண ஆவணங்கள் மற்றும் அவர்கள் மலேசியாவிற்குள் நுழைந்ததற்கான உண்மையான காரணங்களை முழுமையாகச் தணிக்கை செய்ய வேண்டும் என்று ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி மற்றும் உள்துறை அமைச்சு விடுத்த உத்தரவின் அடிப்படையில் இந்த அதிரடிச் சோதனை அரங்கேறியது.




















