கோலாலம்பூர்:
மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் (MCMC) வழி அரசாங்கம் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்துள்ள 2026 அனைத்துலக ஒழுங்குமுறை மாநாடு (IRC 2026), வரும் ஜூலை 21,22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
தொடர்புத் துறை அமைச்சின் கீழ் MCMC நடத்தும் இந்த மாநாடு, புதிய தொழில்நுட்பங்களின் அதிவேக வளர்ச்சிக்கு மத்தியில், நாட்டின் டிஜிட்டல் சூழல் அமைப்பை மேலும் பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும், மீள்திறன் மிக்கதாகவும் மாற்றுவதற்கான அரசாங்கத்தின் தொடர் அர்ப்பணிப்பை நிரூபிக்கும் சான்றாக அமைகிறது.
ஷாங்கிரி-லா கோலாலம்பூரில் நடைபெறவுள்ள இந்த இருநாள் நிகழ்வில், டிஜிட்டல் ஒழுங்குமுறையின் சவால்கள் மேலும் எதிர்கால திசைகள் குறித்து விவாதிக்க உள்நாட்டு, வெளிநாட்டு ஒழுங்குமுறை அதிகாரிகள், கொள்கை வகுப்பாளர்கள், தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஒன்றிணையவுள்ளனர்.
‘டிஜிட்டல் எல்லைகள்’, இணைக்கப்பட்ட யுகத்தில் பாதுகாத்தல், அதிகாரப்படுத்துதல், செழித்தோங்குதல்’ (Digital Horizons: Safeguarding, Empowering and Thriving in the Connected Age) என்ற கருப்பொருளிலான இந்த மாநாட்டை தொடர்புத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஃபாமி ஃபட்ஸில்ஊ அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைப்பார்.
தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள், சைபர் பாதுகாப்பு மேலும் பயனீட்டாளர் பாதுகாப்பு ஆகியவற்றை சமநிலைப்படுத்தக்கூடிய டிஜிட்டல் கொள்கைகளை வகுப்பதில் அரசாங்கம், தொழில்துறை மேலும் அனைத்துலக சமூகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான ஒரு மூலோபாய தளமாக இந்த ‘IRC 2026’ விளங்கும் என்று MCMC தனது அறிக்கையில் தெரிவித்தது.
10 விவாத அமர்வுகள் மேலும் 35 நிபுணர்கள்:
இந்த இருநாள் மாநாட்டில் செயற்கை நுண்ணறிவு (AI), ஆன்லைன் பாதுகாப்பு, குவாண்டம் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், தரவு பாதுகாப்பு, டிஜிட்டல் நல்வாழ்வு, எதிர்கால திறமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முக்கியமான சிக்கல்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். பல்வேறு அரசு முகமைகள், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்கள், அனைத்துலக அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 35 வல்லுநர்கள் பங்கேற்கும் 10 உரையாடல் அமர்வுகள் இதில் இடம்பெறவுள்ளன.
*முதல் நாள்: MCMC வாரிய உறுப்பினர் டெரெக் ஜோன் பெர்னாண்டஸின் தொடக்க உரையுடன் மாநாடு ஆரம்பமாகும். தொடர்ந்து, இணையப் பக்கங்களில் சிறார்களின் டிஜிட்டல் வளர்ச்சியைப் பாதிக்காமல் அவர்களை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த சிறப்பு விவாத அமர்வு நடைபெறும். மேலும் ஆன்லைன் பாதுகாப்பு, தரவு இறையாண்மை, தனியுரிமை, ஒழுங்குமுறைக் கொள்கை, பொருளாதார வளர்ச்சிக்கு இடையிலான சமநிலை, மனிதநேயத்தில் AI-இன் பங்கு ஆகியவற்றுடன் தொடர்புடைய 4 விவாதங்கள் நடைபெறும்.
இதில் SUHAKAM, UNICEF, Ericsson, Maxis, Sea, Shopee Malaysia, PwC, CyberSecurity Malaysia, சிங்கப்பூரின் IMDA அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.
*இரண்டாம் நாள்: எதிர்கால தொழில்நுட்பங்களான குவாண்டம் தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் சார்புநிலை, மனநலம், பிராந்திய ஒழுங்குமுறை ஒத்துழைப்பு, புதுமை அடிப்படையிலான தொழில்துறை உருமாற்றம், டிஜிட்டல் திறமை மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும். இதில் IBM Quantum, Huawei Malaysia, மலாயா பல்கலைக்கழகம் (UM), UTM, UKM, மலேசிய தொடர்பு, ஊடக உள்ளடக்கப் பேரவை (CMCF), இன்டர்நெட் சொசைட்டி (ISOC), அனைத்துலக தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU), சுகாதார அமைச்சு (KKM) ஆகியவற்றின் வல்லுநர்கள் பங்கேற்கின்றனர்.
இம்மாநாட்டின் ஒட்டுமொத்த சுருக்க உரையை ITU-இன் அதிகாரப்பூர்வ திட்டமிடல், உறுப்பினர் பிரிவின் தலைவர் ஸுலினா அப்துல்லா வழங்கவுள்ளார்.
மலேசியாவின் டிஜிட்டல் மைய லட்சியம்:
MCMC-இன் கூற்றுப்படி, தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக IRC மாநாட்டை நடத்துவது, பிராந்திய மேலும் அனைத்துலக அளவில் டிஜிட்டல் கொள்கை, ஒழுங்குமுறை விவாதங்களில் மலேசியா எப்போதும் முன்னிலையில் இருப்பதை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் தீவிரத்தைக் காட்டுகிறது.
இந்த மாநாடு மலேசியாவை டிஜிட்டல் கொள்கை உரையாடல்களுக்கான ஒரு முனையமாக (Hub) நிலைநிறுத்துவதோடு, நாட்டின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய, நம்பகமான டிஜிட்டல் சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான நாட்டின் லட்சியத்திற்கும் வலு சேர்க்கும்.
முன்னதாக, 2024-இல் நடந்த முதலாவது மாநாடு ‘நிலையான எதிர்காலத்திற்காக பாதுகாப்போடு புதுமைகளை ஒருங்கிணைத்தல்’ என்ற கருப்பொருளிலும், 2025-இல் நடைபெற்ற இரண்டாவது மாநாடு ‘குவாண்டம் யுகத்தில் முன்னோக்கிச் செல்லுதல்: தொழில்நுட்ப யுகத்தில் ஒழுங்குமுறை, புதுமை’ என்ற கருப்பொருளிலும் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


















