போலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டல்: இளம் காதலர்கள் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கோலாலம்பூர்:

பினாங்கு, பாயா தெருபோங் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் போலித் துப்பாக்கியைக் காட்டி இரு நபர்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் 18 வயதான இளம் காதலர்கள் இருவரை நான்கு நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய ஜார்ஜ் டவுன் மேஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இவ்விருவரும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்ட போது, அதைத் தட்டிக்கேட்ட அதே வீட்டில் வாடகைக்கு தங்கி உள்ள இருவரை நோக்கி சம்பந்தப்பட்ட சந்தேக நபர் பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் காவல்துறையில் புகார் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஜாலான் துன் டாக்டர் அவாங் பகுதியில் உள்ள ஒரு மலிவு விலை விடுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் இவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

இச்சோதனையின் போது உண்மையான துப்பாக்கியைப் போன்று தோற்றமளிக்கும் ஒரு பொம்மைத் துப்பாக்கியையும் தோட்டா உறையையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவம் குறித்து குற்றவியல் சட்டம் பிரிவு 506-இன் கீழ் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here