நீட் தேர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட திரையுலகினர்

நீட் எதிர்ப்பு மாணவர் போராட்டத்திற்கு திரைப்பிரபலங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் தலைமையில் சென்னையில் போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர் அமைப்புகள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி ஜந்தர் மந்தர் முதல் தமிழகத்தின் பல மாவட்டங்கள் வரை போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாணவர்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நேரடியாகக் களம் இறங்குகின்றனர்.

நீட் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் CJP, SFI, DYFI உள்ளிட்ட மாணவர் அமைப்புகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை தலைமைச் செயலகம் மற்றும் எழும்பூர் பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இசைக்கலைஞர் அறிவு போன்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

வடமாநிலத்தில் ஆலியா பட், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் குரல் கொடுத்துள்ள நிலையில், தென்னிந்திய திரையுலகம் சென்னை மண்ணில் நேரடியாக வீதியில் இறங்கி போராடத் துணிந்துள்ளது. நடிகர் பிரகாஷ் ராஜ் நேரடியாக போராட்டத்தில் கலந்து கொண்டார். இயக்குநர் பா.ரஞ்சித், வரலட்சுமி சரத்குமார், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட பலர் தங்களது சமூக வலைதளப் பக்கம் மூலமாக ஆதரவு குரல் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நீலம் பண்பாட்டு மையம் சார்பில் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர், லெனின் பாரதி, சத்யராஜ், மன்சூர் அலிகான், நடிகர் கலையரசன், பாடகர் அறிவு, இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் கலந்து கொண்டனர். மேலும் நீட் தேர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். இவர்களோடு நடிகை ஆண்ட்ரியாவும் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here