ஆன்லைன் கேம்ஸ்களை முறைப்படுத்துவதற்கு சிறந்த வழிகள் என்ன? எம்சிஎம்சி ஆய்வு

ஆன்லைன் கேம்ஸ்களில் ஈடுபடுவோரில் குறிப்பாக சிறார்கள் பாதுகாப்பு தொடர்பில் அதிகரித்து வரும் கவலைகளைத் தொடர்ந்து அதனை முறைப்படுத்துவதற்குரிய மிகச்சிறந்த மேலும் விரைவான வழிகளைத் தொடர்புத்துறை அமைச்சு மலேசியத் தொடர்பு பல்லூடக ஆணையம் வழி ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கிறது என்று அதன் அமைச்சர் டத்தோ ஃபாமி ஃபட்ஸில் கூறினார்.


இவ்விவகாரம் தொடர்பில் எம்சிஎம்சி-யுடன் அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவில்லை. மதிப்பீட்டு அளவிலேயே அது இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். ஆன்லைன் பாதுகாப்புச் சட்டம் அடுத்தாண்டு தொடக்கத்தில் அமலுக்கு வரும். ஆன்லைன் சேவைகளை வழங்கி வரும் அனைத்து சமூக ஊடக நடத்துநர்களும் பாதுகாப்பு முறைகளை உருவாக்குவதை உறுதி செய்வதற்கு இச்சட்டம் பயன்படுத்தப்படும் என்றார் அவர்.


பிள்ளைகள், குடும்பங்களுக்கு ஒரு பாதுகாப்பை வழங்கக்கூடிய சட்ட அம்சங்களை இந்தப் புதிய சட்டம் கொண்டிருக்கும். குறைந்தபட்சம் 10 வகையான ஆன்லைன் கேம்ஸ்களுக்கு லைசென்ஸ் வழங்கப்படுவதை அமைச்சு மதிப்பீடு செய்து வருவதாக அவர் கூறினார். மேலும் 16 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்களுக்கு இந்த ஆன்லைன் கேம்ஸ்கள் பொருத்தமானவையாக இல்லை என்று கருதப்படுவதாகவும் குறிப்பிட்ட அவர், ஆய்வே இதற்குச் சிறந்த பரிகாரமாகும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு சற்று கால அவகாசம் தேவை என்று கூறினார். இங்கு பகாங் மாநில அளவிலான இண்டர்நெட் பிரச்சாரத்தை ரவுப்பில் உள்ள ரவுப் இண்டா தேசிய ஆரம்பப்பள்ளியில் தொடங்கிவைத்த பின்னர் ஃபாமி செய்தியாளர்களிடம் பேசினார்.


ஜோகூர் பத்து பகாட்டில் உள்ள கம்போங் பாரிட் நிப்பா லாவுட்டில் 6 வயதுச் சிறுவனை அவனது 9 வயது அண்ணன் கழுத்தில் காயம் ஏற்படுத்தி இருப்பது தொடர்பில் ரோப்லோக்ஸ் பிரதிநிதிகளை தம்முடைய அமைச்சு சந்தித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ரோப்லோக்ஸ் கேம்ஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட இந்த 9 வயதுச் சிறுவன் அவனது தம்பிக்கு இந்தக் காயத்தை ஏற்படுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 10 வகையான ஆன்லைன் கேம்ஸ்களுக்கு லைசென்ஸ் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதில் இந்த ரோப்லோக்ஸ் கேம்ஸும் இடம்பெற்றிருக்கிறது என்றார்.


தன்னுடைய பிள்ளைகள் ரோப்லோக்ஸ் கேம்ஸை விளையாடுவதைத் தாம் முழுமையாகத் தடை செய்திருப்பதோடு தனது இல்லத்தில் உள்ள அனைத்துக் கருவிகளில் இருந்தும் அந்த விளையாட்டை முழுமையாக நீக்கி இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here