மனஅழுத்தம், மனச்சிதைவு நோய்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது ‘சொக்சோ’ (SOCSO): நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆர். ரமணன் விளக்கம்!

கோலாலம்பூர்:

மனஅழுத்தம் (Depression), மனச்சிதைவு (Schizophrenia) உள்ளிட்ட மனநலப் பாதிப்புகளால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ – SOCSO) ‘இயலாமைத் திட்டத்தின்’ (Invalidity Scheme) கீழ் உரியப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்று மனிதவளத் துறை அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தகுதிபெறும் ஊழியர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalidity Pension) மற்றும் மறுவாழ்வு உதவிகள் (Rehabilitation Benefits) உள்ளிட்ட முக்கிய அனுகூலங்கள் கிடைக்கும்.

செனட்டர் எஸ். வேள்பாரி எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய மனிதவளத் துறை பிரதிநிதி, இந்த மனநலப் பாதிப்புகள் பணிச்சூழலால் மட்டும் நேரடியாக ஏற்படுபவை அல்ல என்பதால், அவை ‘தொழில்சார் நோய்களாக’ (Occupational Diseases) கருதப்படாமல் பொதுச் சுகாதாரப் பிரச்சினைகளாகவே (General Health Conditions) வகைப்படுத்தப்படுகின்றன என விளக்கமளித்தார்.

பணியிட ஆபத்துகள் மற்றும் பணிச்சூழலால் நேரடியாக ஏற்படும் குறிப்பிட்ட நோய்கள் அல்லது காயங்களுக்கு, 1969-ஆம் ஆண்டின் ஊழியர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் இயங்கும் வேலைக்காயத் திட்டத்தின் வழியே உரிய நஷ்டஈடு வழங்கப்படும்.

மேலும் ஒரு நோய் அல்லது பாதிப்பு உண்மையிலேயே பணிச்சூழலால் தான் ஏற்பட்டதா என்பதைத் தகுந்த ஆதாரங்கள் மற்றும் புலனாய்வு முடிவுகளின் அடிப்படையில் சிறப்பு மருத்துவ வாரியமும் (Special Medical Board), மேல்முறையீட்டு மருத்துவ வாரியமும் (Medical Appeal Board) தீர்க்கமாக முடிவு செய்யும்.

மேலும், பணியிட மனஅழுத்த நிர்வாகம் மற்றும் ஊழியர்களின் மனநலம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தச் சொக்சோ சார்பில் இலவசக் கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here