கோலாலம்பூர்:
சிலாங்கூர் மாநிலத்தில் பல்வேறு ஆயுதக் கொள்ளைகள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ‘வினோத் கெங்’ (Vinod Gang) கும்பலைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் மீது நாளை வெள்ளிக்கிழமை (ஜூலை 24) நீதிமன்றத்தில் முறைப்படி குற்றஞ்சாட்டப்படவுள்ளது.
நாளை காலை 9:30 மணியளவில் சிப்பாங் நீதிமன்றத்தில் (Sepang Courthouse) இவர்கள் அனைவரும் ஆஜர்படுத்தப்படுவார்கள் என புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (CID) இயக்குநர் கமிஷனர் டத்தோ எம். குமார் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 130V(1)-இன் கீழ் (சட்டவிரோதச் அமைப்பில் உறுப்பினராக இருத்தல்) 11 சந்தேக நபர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்ய அரசுத் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் (AGC) அறிவுறுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப் ரபிடோ’ (Ops Rapido) என்ற சிறப்புச் சோதனையின் போது இக்கும்பலைச் சேர்ந்தவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.
30 வயது உள்ளூர் நபர் ஒருவனால் வழிநடத்தப்பட்ட இக்கும்பலில், 20 முதல் 34 வயதுக்குட்பட்ட மொத்தம் 17 உறுப்பினர்கள் அங்கம் வகித்துள்ளனர்.
கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் தீவிரமாக இயங்கி வரும் இக்கும்பல்; கூட்டுக் கொள்ளை, கொலை முயற்சி, கூரிய ஆயுதங்களால் தாக்குதல் நடத்துதல், கலவரம் விளைவித்தல் மற்றும் பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்தல் போன்ற பல தீவிர குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளது.
பணபலம், அதிகாரம் மற்றும் செல்வாக்கைப் பெறுவதற்காக இக்கும்பல் கூரிய ஆயுதங்களுடன் குடியிருப்பு வீடுகளுக்குள் புகுந்து கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தது.
கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் ஏற்கனவே கொலை முயற்சி, கொள்ளை, போதைப்பொருள் வழக்குகள் உள்ளிட்ட பல குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள் ஆவர்.
இவர்களது கைதின் மூலம் சிலாங்கூரில் நிலுவையில் இருந்த 21 தீவிர குற்ற வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதோடு, ஆயுதக் கொள்ளைக் கும்பல் ஒன்றும் முற்றாக முறியடிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், தலைமறைவாக உள்ள இக்கும்பலின் மற்ற 5 உறுப்பினர்களின் அடையாளங்கள் கண்டறியப்பட்டு, அவர்களைக் கைது செய்யப் போலீஸார் தீவிர வலை வீசி வருகின்றனர்.




















