குரூன்:
கெடா, குரூனில் உள்ள கம்போங் புக்கிட் குவாங் (Kampung Bukit Kuang) பகுதியில், 61 வயதான சொந்தத் தாத்தா ஓட்டி வந்த ‘டிரெய்லர்’ (Trailer) லோரி மோதியதில் 2 வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
இன்று காலை 10:20 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கெடா மாநிலக் காவல் துறைத் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறினார்.
61 வயதான தாத்தா லோரியைப் பின்னோக்கி (Reverse) நகர்த்தியபோது, பேத்தி பின்புறம் நிற்பதைக் கவனிக்காமல் லோரியை இயக்கியுள்ளார்.லோரியின் சக்கரம் சிறுமியின் மீது ஏறியதில், பலத்த காயமடைந்த அச்சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் காவல் துறை இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணைப் பத்திரங்களைத் திறந்துள்ளதை டத்தோ அட்ஸ்லி உறுதிப்படுத்தினார்:
1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1) (கவனக்குறைவாக வாகனத்தை இயக்கி மரணத்தை ஏற்படுத்துதல் – அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்).
2001-ஆம் ஆண்டு குழந்தை பராமரிப்புச் சட்டத்தின் பிரிவு 31(1) (குழந்தையைப் பாதுகாப்பற்ற முறையில் அலட்சியமாக விடுதல்).
சிறுமையின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக சுல்தானா பாஹியா மருத்துவமனையின் (Sultanah Bahiyah Hospital) தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.




















