கோலாலம்பூர் :
மலேசியாவின் மொத்த தேசிய வருமானம் (GNI) மற்றும் பொருளாதார உற்பத்தி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டுள்ளதைத் தொடர்ந்து, மலேசியா ‘உயர் வருவாய் நாடு’ (High-Income Nation) எனும் அந்தஸ்தை எட்டுவதற்கு இன்னும் ஒரே ஒரு அடியில் உள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்துள்ளார்.
இன்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற ‘தேசியப் பயிற்சி வார’ (NTW 2026) நிறைவு விழாவில் உரையாற்றியபோது அவர் இத்தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
2025-ஆம் ஆண்டிற்கான உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை மலேசியாவின் பிரம்மாண்டப் பொருளாதார வளர்ச்சியைச் சுட்டிக்காட்டுவதாக அமைச்சர் கூறினார்: உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, மலேசியாவின் தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI per capita) 12,380 அமெரிக்க டாலர்களைத் தொட்டுள்ளது. இது மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்தே பதிவான மிக உயர்ந்த அளவாகும்.
மேலும் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 472 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.
2027 நிதியாண்டிற்கு உலக வங்கி நிர்ணயித்துள்ள உயர் வருவாய் நாட்டிற்கான வரம்பு 14,000 அமெரிக்க டாலர்களாகும். இதிலிருந்து மலேசியா மிகச் குறைந்த இடைவெளியிலேயே உள்ளது என்று அவர் சொன்னார்.
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் திறம்பட வழிநடத்தலால் கடந்த நான்கு ஆண்டுகளில் மலேசியப் பொருளாதாரம் சரியான பாதையில் பயணித்து வருகிறது என்றும், 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 5.8% வளர்ச்சியடைந்து ஆசியான் பிராந்தியத்திலேயே வலுவான நிலையைப் பெற்றுள்ளதாகவும் ரமணன் சுட்டிக்காட்டினார்.
வலுவான பொருளாதார வளர்ச்சி உள்ளது என எண்களில் மட்டுமே கூறினால் போதாது; அந்த வளர்ச்சி நாட்டின் சாதாரண மக்களையும் சென்றடைய வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
‘தேசியப் பயிற்சி வாரம்’ (NTW) போன்ற திட்டங்கள் மூலம் ஊழியர்கள் தங்களின் தொழில் திறன்களை மேம்படுத்தி, நல்ல வேலைவாய்ப்புகளையும் அதிக வருமானத்தையும் பெற வழிவகை செய்யப்படுகிறது.
மேலும் ‘மனிதவள மேம்பாட்டுக் கழகம்’ (HRD Corp) முதலாளிகளின் வரிப் பங்களிப்பைச் சரியான வழியில் பயன்படுத்தி ஊழியர்களின் திறனை உயர்த்துகிறது. பினாங்கு மாநிலத்தில் மட்டும் நடப்பாண்டின் முதல் பாதியில் சேகரிக்கப்பட்ட RM129.72 மில்லியன் வரியில், RM113 மில்லியன் பயிற்சி நிதியாக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே முறைமை மற்றும் நல்ஆளுமையை (Governance) வலுப்படுத்தி, சேகரிக்கப்படும் ஒவ்வொரு சென்னும் ஊழியர்களின் நலனுக்காகவே பயன்படுத்தப்படுவதை அமைச்சு உறுதி செய்யும் என ரமணன் உறுதியளித்தார்.






















