கோகி கருணாநிதி
போர்ட் டிக்சன்,
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்ற தேர்தலில் லுகுட் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் சார்பில் போட்டியிடும் மலேசிய இந்திய மக்கள் கட்சி பொதுச் செயலாளரும், பெரிக்காத்தான் நேஷனல் உயர்மட்ட மன்ற உறுப்பினருமான சதீஸ் குமார் நிலமேகம், லுகுட் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக பாரிசான் நேஷனலின் 88 தேர்தல் வாக்குறுதிகளையும், பெரிக்காத்தான் நேஷனலின் 12 முக்கிய வாக்குறுதிகளையும் ஒருங்கிணைத்து முழுமையாக செயல்படுத்துவதே தனது இலக்கு என உறுதியளித்துள்ளார்.
வணிக மேலாண்மையில் முதுநிலைப் பட்டம் பெற்றுள்ள சதீஸ் குமார், தொழில்துறை அனுபவம், சமூகப் பணி மற்றும் அரசியல் அனுபவத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவேன் என்றும், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்பு, இளைஞர் மேம்பாடு, சிறு தொழில் வளர்ச்சி, கல்வி மற்றும் சமூக நலன் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் லுகுட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பாடுபடுவேன் என்றும் தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று போர்ட் டிக்சனில் இந்திய சமூகத்தினருடன் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் பாரிசான் நேஷனல் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடி, பாரிசான் நேஷனல்–பெரிக்காத்தான் நேஷனல் புரிந்துணர்வு வெற்றி பெற்று மாநில ஆட்சியை அமைத்தால், இந்திய சமூகத்திற்கு இரண்டு ஆட்சிக்குழு உறுப்பினர் பதவிகள் வழங்கப்படும் என்று உறுதியளித்தார். இந்த அறிவிப்பு இந்திய சமூகத்திற்கு மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகக் கருதப்படுகிறது.
பல ஆண்டுகளாக மாநில நிர்வாகத்தின் உயர்மட்டத்தில் அதிக இந்திய பிரதிநிதித்துவம் வேண்டும் என்ற சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு இந்த உறுதி ஒரு முக்கிய முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. இந்தியர்களின் குரல் மாநில அரசின் முடிவெடுக்கும் நிலைகளில் வலுப்பெற இந்த அறிவிப்பு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையும் உருவாகியுள்ளது.
இந்த உறுதிமொழி இந்திய சமூகத்திற்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளதாகக் கூறிய சதீஸ் குமார், மக்கள் தமக்கு வழங்கும் ஆதரவும் வெற்றியும் கிடைத்தால், லுகுட் தொகுதியில் பி.என். 88 மற்றும் பெரிக்காத்தான் நேஷனலின் 12 முக்கிய வாக்குறுதிகளையும் நடைமுறைப்படுத்தி, அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வளர்ச்சியை உருவாக்க உறுதியுடன் செயல்படுவேன் என்று தெரிவித்தார்.





















