ஜார்ஜ் டவுன்:
பினாங்கு, கெளுகோரில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் 5 வயது சிறுவன் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், அச்சிறுவனின் தாய், அவரது ஆண் நண்பர் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தம்பதியினர் என மொத்தம் நான்கு வெளிநாட்டினரைப் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த வியாழக்கிழமை காலை 10 மணியளவில், அச்சிறுவன் வாந்தி எடுத்து மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, அவனது தாயின் ஆண் நண்பரான 34 வயது பங்களாதேஷ் நபர் சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்குச் சிறுவன் பரிசோதிக்கப்பட்டதில் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகப் பினாங்கு பொது மருத்துவமனை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். சிறுவனின் உடல் முழுவதும் காயங்களும் தழும்புகளும் இருந்ததைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகப் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.
பிரேதப் பரிசோதனையில், சிறுவன் கடுமையான ஆயுதங்களால் அல்லது பொருள்களால் தலை மற்றும் உடற்பகுதியில் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, தென் கிழக்கு மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் அப்துல் ரோசாக் முகமட் கூறினார்.
உணவகத்தில் பணிபுரியும் 30 வயது இந்தோனேசியத் தாய் மற்றும் அவரது பங்களாதேஷ் ஆண் நண்பர் ஆகிய இருவரையும் போலீசார் ஏற்கனவே கைது செய்து ஜூலை 30 வரை தடுப்புக் காவலில் வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாகச் சிறுவனின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டுத் தம்பதியினர் இருவரையும் போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்து, இன்று முதல் 7 நாட்கள் காவல் தடுப்புக் காவலில் எடுத்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த வழக்கு தண்டனைச் சட்டம் பிரிவு 302 (கொலை வழக்கு) மற்றும் 2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் பிரிவு 31(1)(a) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த சிறுவனின் தந்தை (ரோஹிங்கியா நபர்) கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில், தாயின் பராமரிப்பில் இருந்த சிறுவன் இப்படி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் பினாங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




















