நெகிரி செம்பிலான் தேர்தல்: இனப் பிரச்சினைகளை விட்டுவிட்டு மக்களின் திட்டங்களில் கவனம் செலுத்துங்கள் – ஃபஹ்மி ஃபட்ஸில் அறிவுறுத்தல்!

சிரம்பான்:

வரவிருக்கும் நெகிரி செம்பிலான் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் என்பது மாநிலத்தின் எதிர்காலத்திற்கான ஜனநாயகப் போட்டியே தவிர, இனம் அல்லது மத உணர்வுகளைத் தூண்டுவதற்கான மேடை அல்ல என்று தகவல் தொடர்பு அமைச்சரும் அரசுப் பேச்சாளருமான டத்தோஸ்ரீ ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் வாக்காளர்களின் ஆதரவைப் பெற ராஜ வம்சத்தையோ அல்லது பொய்ப் பிரச்சாரங்களையோ பயன்படுத்தக் கூடாது. மாறாக, தங்கள் கட்சியின் சாதனைகள், கொள்கைகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று, நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஃபஹ்மி ஃபட்ஸில் கூறினார்.

“ஒரு கட்சிக்குச் செய்ய வேண்டிய திட்டங்கள் குறித்து யோசனைகள் இல்லாதபோது, அது வெறுப்பையும் பிரிவினையையும் விற்கத் தொடங்குகிறது. மக்கள் இப்போது வாழ்க்கைச் செலவினங்களைக் குறைப்பது, அதிகச் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, இளைஞர்களுக்கான வீட்டுவசதி மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற உண்மையான தீர்வுகளையே எதிர்பார்க்கிறார்கள்.”

வெறுப்பையும் தூண்டுதல்களையும் பரப்புவதன் மூலம் நாட்டிற்குப் புதிய முதலீடுகளைக் கொண்டு வர முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், நம்பிக்கை சார்ந்த அரசியலையே பக்கத்தான் ஹராப்பான் (PH) முன்வைப்பதாகக் கூறினார்.

நெகிரி செம்பிலான் ஒரு அமைதியான மாநிலம் எனக் குறிப்பிட்ட அமைச்சர், குறுகிய அரசியல் லாபங்களுக்காக மாநிலத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்க வேண்டாம் என அனைத்துக் கட்சிகளையும் கேட்டுக்கொண்டார். மேலும் எஞ்சியுள்ள பிரசாரக் காலத்தில் தேர்தல் சட்டங்களை மதித்து, உண்மைத் தகவல்களின் அடிப்படையில் முதிர்ச்சியான முறையில் பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அண்மையில் கெடா மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமட் சனூசி முகமது நோர், மலேசிய இனங்கள் குறித்துப் பேசிய கருத்து தொடர்பாகத் தொடர்பாடல் மற்றும் பல்லூடகம் ஆணையம் (MCMC) விசாரணைக்கு அழைத்துள்ளதா என்ற கேள்விக்கு, அதுகுறித்த புதிய தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்கவில்லை என்று ஃபஹ்மி பதிலளித்தார். பிரசாரங்களின் போது பேசப்படும் வெறுப்புப் பேச்சுகளைக் கையாளத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களே போதுமானவை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here