கட்டுக்கடங்காத காட்டுத்தீ: கனடாவில் அவசரநிலை அறிவிப்பு

ஒட்டாவா:

கனடாவின் வடமேற்குப் பகுதியில் இதுவரை காணாத அளவுக்கு காட்டுத்தீ பரவி வருவதைத் தொடர்ந்து அந்த வட்டார அரசு நிர்வாகம் அவசரநிலையை அறிவித்து உள்ளது.

“காட்டுத்தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சிக்கு அரசு நிர்வாகத்தை ஆதரிக்கும் விதமாக தேவையான வளங்களைத் திரட்டவும் இந்த அவசரநிலைப் பிரகடனம் உதவும்.

“மேலும், வடமேற்கு வட்டார குடியிருப்பாளர்களின் பாதுகாப்புக்கும் சுகாதாரத்துக்கும் அதிகமான உதவிகளை மேற்கொள்ள இந்த அறிவிப்புப் பயன்படும்,” என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வடமேற்கு வட்டார காட்டுத்தீயை முடிவுக்குக் கொண்டு வர கூட்டரசு உதவிக்கு ஏற்கெனவே அனுமதி வழங்கிவிட்டதாக கனடிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது.

ஆபத்துள்ள இடங்களில் தீயணைப்பாளர்களையும் தீயணைப்புக் கருவிகளையும் ஏராளமாகக் குவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அது குறிப்பிட்டிருந்தது.

நீண்டதூரத்திற்கு அடர்ந்த காடுகளும் மலைகளும் நிறைந்த பகுதி கனடாவின் வடமேற்கு வட்டாரம்.

கனடாவில் செவ்வாய்க்கிழமை 1,100 தீச்சம்பவங்கள் பதிவாயின. இவற்றில் 230 வடக்கு வட்டாரத்தில் நிகழ்ந்தவை. பல இடங்களில் புதன்கிழமையும் தீ தொடர்ந்து எரிந்துகொண்டு இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here