மோசடிக் கும்பலுக்கு உதவிய குற்றச்சாட்டில் மலேசியர் ஒருவருக்கு சிங்கப்பூரில் 26 மாதச் சிறைத் தண்டனை!

கோலாலம்பூர்:

ரசாங்க அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து பொதுமக்களை ஏமாற்றி வந்த மோசடிக் கும்பலுக்கு உடந்தையாக இருந்த 22 வயது மலேசிய இளைஞர் தாரணேஸ்வரன் கிருஷ்ணாவுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 2 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் (26 மாதங்கள்) சிறைத் தண்டனை விதித்துள்ளது.

நேற்று (டிசம்பர் 29) நடைபெற்ற வழக்கு விசாரணையில், குற்றச் செயல்கள் மூலம் மற்றவர்கள் பலனடைய உதவியதை தாரனேஸ்வரன் ஒப்புக்கொண்டார்.

இந்தக் கும்பல் அரசாங்க அதிகாரிகள் போல நடித்து இரண்டு பெண்களை ஏமாற்றியுள்ளது. இதில் அந்தப் பெண்கள் சுமார் $190,000 (சிங்கப்பூர் வெள்ளி) மதிப்பிலான ரொக்கம் மற்றும் உடைமைகளை இழந்தனர்.

இதில் குற்றவாளி தாரனேஸ்வரனின் பங்கு என்னவென்றால், மோசடிக்காரர்களின் அறிவுறுத்தலின்படி, பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து $40,000-க்கும் அதிகமான பணத்தைப் பெற்று அதனைத் தனது கும்பலிடம் ஒப்படைக்கும் ‘பணக் கடத்தியாக’ (Money Mule) அவர் செயல்பட்டுள்ளார்.

தாரனேஸ்வரன் தனது உறவினர் ஒருவர் மூலமாகச் சிங்கப்பூரில் வேலை இருப்பதாகக் கேள்விப்பட்டு இதில் இணைந்துள்ளார். டெலிகிராம் (Telegram) செயலி வாயிலாக அறிமுகமில்லாத நபர்கள் வழங்கும் கட்டளைகளை அவர் நிறைவேற்ற வேண்டியிருந்தது.

இந்தச் சட்டவிரோத வேலைக்காக அவருக்கு ஒரு நாளைக்கு 500 ரிங்கிட் (சுமார் 158 சிங்கப்பூர் வெள்ளி) ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து பறிக்கப்பட்ட மீதமுள்ள பணம் என்னவானது அல்லது அவர்கள் இழந்த சொத்துக்கள் மீட்கப்பட்டதா என்பது குறித்த விவரங்கள் நீதிமன்ற ஆவணங்களில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.

குற்றக் கும்பல்களுக்குத் தெரிந்தே உதவி செய்வதும், ஆள்மாறாட்ட மோசடிகளில் பங்கெடுப்பதும் கடுமையான தண்டனைக்குரிய குற்றம் என்பதை இந்தத் தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here