ம்ம்.. என்னோட 90 நிமிஷ பேச்சை கேட்டு காங்கிரஸ் கூட்டணியே பீதியாகிபோய் கிடக்கு.. பெருமிதப்படும் மோடி

ஜெய்ப்பூர்: மக்கள் சொத்தை அபகரிக்கும் காங்கிரஸ் கட்சியின் சதித்திட்டத்தை தான் அம்பலப்படுத்தியதால் காங்கிரஸ் மற்றும் ஒட்டுமொத்த இந்தியா கூட்டணி பீதியில் இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த பிரச்சார கூட்டத்தில் நேற்று பேசிய பிரதமர் மோடி, பெண்களின் தாலியை கூட காங்கிரஸ் பறிக்க விரும்புகிறது.. அதை பறித்து சிலருக்கு பகிர்ந்தளிக்க விரும்புகிறது என்று பேசியிருந்தார். அவரது இந்தக் கருத்துக்கு நாடு முழுக்க உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி: இதற்கிடையே இன்று உபி-இன் டோங்க் என்ற பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி மீண்டும் இதே கருத்தை கூறியிருக்கிறார். அதாவது மக்கள் சொத்தை அபகரித்து, அதை சில ஸ்பெஷல் பிரிவினருக்கு பங்கிட்டு கொடுக்க காங்கிரஸ் சதி செய்கிறது என்ற உண்மையை மட்டுமே நாட்டு மக்களிடம் கூறியதாக பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

90 நொடி பேச்சு: நேற்று டோங்க் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, எனது பேச்சு ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணிக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் நான் ராஜஸ்தானில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசியிருந்தேன். எனது உரையில்​​90 வினாடிகளில் நான் சில உண்மைகளை நாட்டு மக்களுக்கு தெரிவித்தேன்.. இது ஒட்டுமொத்த காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் செய்யும் சதியை மட்டுமே நான் நாட்டு மக்களிடையே முன் வைத்தேன். மக்களின் சொத்தை அபகரித்து, அதை சில ஸ்பெஷல் பிரிவினருக்கு பங்கிட்டு கொடுக்கும் காங்கிரஸின் சதியை நான் அம்பலப்படுத்தினேன்.. இந்த உண்மையை கண்டு காங்கிரஸ் ஏன் அஞ்சுகிறது என்பது எனக்கு புரியவில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால்: 2014ஆம் ஆண்டு என்னை பிரதமராக தேர்வு செய்தீர்கள்.. டெல்லியில் ஆட்சி அமைக்க அனுமதித்தீர்கள். ஆனால் 2014க்கு பிறகும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால்.. ஜம்மு-காஷ்மீரில் இன்றும் நமது படைகள் கல்வீச்சு தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிட்டு இருக்கும். காங்கிரஸ் இருந்திருந்தால், நமது ராணுவ வீரர்களுக்கு ஒரு பதவி- ஒரு பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்காது.. இதன் மூலம் நமது முன்னாள் ராணுவத்தினர் ₹1 லட்சம் கோடி கிடைத்தும் இருக்காது. காங்கிரஸ் எப்போதும் சில ஸ்பெஷல் பிரிவினரை திருப்திப்படுத்தும் அரசியலையும் வாக்கு வங்கி அரசியலையும் மட்டுமே பின்பற்றி வருகிறது

மத ரீதியான இட ஒதுக்கீடு: 2004இல் மத்தியில் காங்கிரஸ் அரசு அமைந்தவுடன் முதல் வேலையாக ஆந்திராவில் எஸ்சி/எஸ்டிக்கான இடஒதுக்கீட்டைக் குறைத்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டை வழங்கியது. இது வெறும் சோதனை முயற்சி தான். இதை காங்கிரஸ் முழுவதுமாக செய்ய விரும்பியது. 2004 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் ஆந்திரப் பிரதேசத்தில் முஸ்லீம் இடஒதுக்கீட்டை கொண்டு வர காங்கிரஸ் நான்கு முறை முயன்றது. இருப்பினும், சட்ட ரீதியான சிக்கல் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளால் அதை காங்கிரஸால் நிறைவேற்ற முடியவில்லை.

உத்தரவாதம்: நமது அரசியலமைப்புச் சட்டம் முற்றிலும் அதற்கு எதிராக இருக்கிறது. தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பாபா சாகேப் அம்பேத்கர் இடஒதுக்கீடு உரிமையை வழங்கி இருக்கிறார். ஆனால், காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி அதை மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வழங்க விரும்புகிறது. காங்கிரஸின் இந்த சதிகளுக்கு மத்தியில் இன்று உங்களுக்கு உத்தரவாதம் அளிக்க விரும்புகிறேன். தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு நிறுத்தப்படாது.. மதத்தின் பெயரால் இடஒதுக்கீடு வழங்கப்படாது.. இதுவே மோடியின் உத்தரவாதமாகும்” என்று அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here