கோலாலம்பூர்:
ஈப்போ சோஹோவில் உள்ள பலசரக்குக் கடை ஒன்றில் நடைபெற்ற சண்டையைத் தொடர்ந்து, 4 ஆப்கானிஸ்தான் ஆண்களைப் போலீசார் கைது செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில், அது கடந்த மே மாதம் நடைபெற்ற சம்பவம் எனப் போலிசார் விளக்கம் அளித்துள்ளனர்.
இத்தகவலை ஈப்போ மாவட்டக் காவல் துறைத் தலைவர், அசிஸ்டெண்ட் கமிஷனர் முகமது நஜீப் அம்சா இன்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
மே 28 அதிகாலை சம்பவம்: கடந்த மே 28 அன்று அதிகாலை 5:10 மணியளவில் 25 முதல் 28 வயதுக்குட்பட்ட 4 ஆப்கானிஸ்தான் ஆண்களிடையே சண்டை நடப்பதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பெக்கான் பாரு காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
சண்டையைத் தடுக்க முயன்ற காவல் அதிகாரிகளிடம் இருவர் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு அவர்களைத் தாக்க முயன்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
துப்புரவுப் பணியாளர்களாகப் பணிபுரியும் அந்த 4 நபர்களும் மதுபோதையில் தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொண்டது விசாரணையில் தெரியவந்தது. அவர்கள் நால்வரும் கைது செய்யப்பட்டுப் பெக்கான் பாரு காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னரும், அங்கிருந்த அதிகாரிகளிடம் இருவர் தொடர்ந்து வரம்பு மீறி நடந்து கொண்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கடந்த ஜூன் 12-ஆம் தேதியே நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவிட்டன.அவர்க ள் மீது குற்றவியல் சட்டத்தின் பிரிவு 160 (பொது இடத்தில் சண்டையிடுதல்), பிரிவு 353 (அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தல்/தாக்குதல்) மற்றும் காவல் துறைச் சட்டம் 1967-இன் பிரிவு 90 (காவல் நிலையத்தில் அத்துமீறி ரகளையில் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைதளங்களில் பரவும் பழங்காலக் காணொளியை வைத்துப் பொதுமக்கள் தேவையின்றி வீண் ஊகங்களைச் செய்ய வேண்டாம் என்றும், தவறான தகவல்களைப் பரப்பிப் பொதுமக்களைத் திசைதிருப்ப வேண்டாம் என்றும் மாவட்டக் காவல் துறைத் தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.




















