கோலாலம்பூர்:
மலேசியாவின் தாபோங் ஹாஜி (TH) புனிதப் பயண நிதியத்தின் 2014 முதல் 2020 வரையிலான நிர்வாகம் மற்றும் செயல்பாடுகள் குறித்த அரச விசாரணை ஆணையத்தின் (RCI) அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.
இதில், அரசியல் தலையீடு, சட்டப்பூர்வ விதிகளை மீறி அதிக அளவு போனஸ் வழங்கியது, தவறான கணக்கு வழக்கைக் காட்டி ‘ஹிபா’ இலாபப் பங்கீட்டை அறிவித்தது போன்ற கடுமையான முறைகேடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக, 2017-ஆம் நிதியாண்டில் RM3.4 பில்லியன் இலாபம் ஈட்டியதாகக் கூறப்பட்ட வேளையில், நிதியத்தின் உண்மையான நிலை RM1.4 பில்லியன் நிகர இழப்பாகும் என்று அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.
இதனுடன், விதிமுறைகளை மீறி வழங்கப்பட்ட RM2.19 மில்லியன் போனஸ் தொகையைத் திரும்பப் பெறவும் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ள காவல்துறை புகார்கள் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு RCI வலியுறுத்தியுள்ளது.
அதிக நஷ்டத்தை ஏற்படுத்திய 14 முக்கிய முதலீட்டு முடிவுகள் குறித்து தடயவியல் தணிக்கை (Forensic Audit) நடத்தப்பட வேண்டும் என்றும், தாபோங் ஹாஜி சட்டத்தில் உரிய திருத்தங்கள் மேற்கொண்டு நிதி நிர்வாகத்தையும் புனிதப் பயண நிர்வாகத்தையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், எதிர்காலத்தில் அரசியல் தலையீடுகளைத் தவிர்த்து, சந்தாதாரர்களின் நலனைப் பாதுகாக்க முடியும் என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது.





















