கோலாலம்பூர்:
மலேசியாவிலிருந்து கடல் மார்க்கமாக 32 சட்டவிரோதக் குடியேறிகளைக் கடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலக் கடல்சார் அமலாக்க துறையினர் இன்று அதிகாலை அவர்களைக் கைது செய்தனர்.
இன்று அதிகாலை சுமார் 4.15 மணியளவில், கோலா சிலாங்கூர் தென்மேற்கே 3.6 கடல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான ஒரு மரப்படகை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
பதிவு எண் இல்லாத அந்தச் சிவப்பு மற்றும் நீல நிறப் படகை நிறுத்தச் சொன்னபோது, அதன் மாலுமி படகை நிறுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றார். சுமார் 15 நிமிடத் துரத்தலுக்குப் பிறகு அதிகாரிகள் அந்தப் படகை இடைமறித்துக் கைப்பற்றினர்.
சோதனையில் அந்தப் படகில் 23 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என மொத்தம் 32 பேர் இருந்தது கண்டறியப்பட்டது. அவர்களின் வயது 24 முதல் 60-க்குள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களிடம் முறையான அடையாள ஆவணங்கள் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து 1959/63 குடிவரவுச் சட்டம் மற்றும் 2007 மனிதக் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் எதிர்ப்புச் சட்டத்தின் (Atipsom) கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்ட அனைவரும் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகும் மேல் நடவடிக்கைக்காகப் புலாவ் இண்டாவில் (Pulau Indah) உள்ள கடல்சார் போலீஸ் முனையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கடல்சார் எல்லைகளில் மனிதக் கடத்தல் உள்ளிட்ட எல்லை தாண்டிய குற்றங்களைத் தடுக்கக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று கடல்சார் கமாண்டர் முகமது பைருஸ்நிஜாம் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார். இது போன்ற குற்றங்கள் குறித்துத் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் 013-6606652 என்ற எண்ணிற்குத் தொடர்பு கொள்ளலாம்.























