(கோகி கருணாநிதி)
ஜோகூர் பாரு:
ஜோகூர் மாநில வீடமைப்பு, ஊராட்சித் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ஜாப்னி முகமட் ஷுகோர், கடந்த ஜூலை 29-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை நிறைவு செய்த பின்னர், ஜோகூர் பாருவிலுள்ள டாங்கா பூங்காவிற்குச் சென்று அங்குள்ள பொழுதுபோக்கு வளாகத்தின் நிலைமையை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, குடும்பத்தினரும் நண்பர்களுடனும் ஏராளமானோர் பூங்காவிற்கு வருகை தந்து மகிழ்ச்சியாக நேரத்தைச் செலவிட்டதை அவர் பார்வையிட்டார். இதுபோன்ற பொது இடங்கள் மக்களின் ஓய்வு நேரத்தைப் பயனுள்ளதாகக் கழிக்கவும், குடும்ப உறவுகளை வலுப்படுத்தவும், சமூக ஒற்றுமையை மேம்படுத்தவும் முக்கியப் பங்காற்றுகின்றன என்று அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, அங்கிருந்த பொதுமக்களைச் சந்தித்து, பொது வசதிகள், சுற்றுப்புறச் சூழல் தொடர்பான அவர்களின் கருத்துகளையும் குறைகளையும் ஜாப்னி கேட்டறிந்தார்.
“மக்களின் ஒவ்வொரு கருத்தும் முக்கியமானது. அவற்றின் அடிப்படையில் ஊராட்சி அமைப்புகள் சேவைகளை மேலும் மேம்படுத்தி, மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் தரமான வசதிகளை வழங்க முடியும்,” என்று அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து, ஜோகூர் பாரு மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டாருடன் இணைந்து, ஜோகூர் பாரு நகரின் அதிகாரப்பூர்வ தூரக் கணக்கீட்டின் தொடக்கப் புள்ளியாகவும், நகரின் முக்கிய அடையாள நினைவிடமாகவும் விளங்கும் ‘0 கிலோமீட்டர்’ பகுதியில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகளையும் அவர் நேரில் ஆய்வு செய்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் அழகாகவும், தரமாகவும் அமைந்துள்ளதாகவும், ஜோகூர் பாருவின் நவீன நகர அடையாளத்தை மேலும் மெருகேற்றுவதாகவும் அவர் பாராட்டினார்.
இந்த மேம்பாட்டுப் பணிகள் நகரின் தோற்றத்தை அழகுபடுத்துவதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதியையும் மேம்படுத்தி, ஜோகூர் பாருவின் முக்கிய சுற்றுலா அடையாளங்களில் ஒன்றாக இப்பகுதியை உருவாக்கும் என்று அவர் தெரிவித்தார்.
“ஊராட்சி அமைப்புகள் செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் தரமாக நிறைவேற்றப்பட்டு, அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்,” என டத்தோ ஜாப்னி முகமட் ஷுகோர் வலியுறுத்தினார்.

இந்த முயற்சிகள், ஜோகூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸியின், ஜோகூரை முன்னேறிய, தூய்மையான, ஒழுங்குமுறையுடன் கூடிய, வளமான மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் இணைந்தவை என்றும் அவர் கூறினார்.
மாநில அரசு, ஊராட்சி அமைப்புகள், பொதுமக்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு தொடர்ந்தும் வலுப்படுத்தப்பட்டு, ஜோகூர் பாரு ‘பங்சா ஜோகூர்’ மக்களின் பெருமைக்குரிய மாநகரமாக தொடர்ந்து திகழும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
























