குபாங் பாசுவில் 9 வயது சிறுவன் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்!

கோலாலம்பூர்:

கெடா மாநிலம், குபாங் பாசு பகுதியில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயமாகியுள்ளதாகக் காவல் துறையில் புகார் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, காவல் துறை இப்புகாரை உறுதிப்படுத்தியுள்ளது.

மாயமான பெண்ணின் தந்தை, தனது மகள் குடும்பத்தினரைப் ஜூலை 20-ஆம் தேதிக்குப் பிறகு தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், அவர்களின் பாதுகாப்புக் குறித்து அச்சமடைந்து புக்கிட் காயூ ஹித்தாம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார்.

36 வயதுடைய சித்தி சுலைகா அகமட் சாப்ரி, அவரது கணவர் கைருல் அசார் அகமட் (வயது 39), மற்றும் அவர்களின் 9 வயது மகன் அடீட் ஆகிய மூவரே மாயமானதாக குபாங் பாசு மாவட்டக் காவல் துறைத் தலைவர் சுப்ரண்டன்ட் முகமது ராட்ஸி அப்துல் ரஹீம் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

அவர்களின் வீட்டின் கண்காணிப்புக் கேமரா (CCTV) பதிவுகளை ஆய்வு செய்ததில், நேற்று அதிகாலை 1:12 மணிக்கு அவர்கள் காரில் வீட்டிற்குத் திரும்பி வந்ததும், பின்னர் மீண்டும் அதே காரில் அதிகாலை 2:20 மணிக்கு வெளியிலும் புறப்பட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

சிறுவனின் பள்ளி ஆசிரியரைத் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அச்சிறுவன் தொடர்ந்து பள்ளிக்கு வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது குடும்பத்தினரும் பொதுமக்களின் உதவியை நாடிச் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மாயமான குடும்பத்தினரைக் கண்டறியக் காவல் துறை தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here