“எங்கள் அதிகாரத்தில் தலையிடாதீர்கள்” – அன்வாருக்கு நெகிரி செம்பிலான் தலைவர்கள் கெடு

கோலாலம்பூர் :

பிரதமர் அன்வார் இப்ராகிமும், தலைமைச் சட்டத்துறை அலுவலகமும் நெகிரி செம்பிலான் மாநில விவகாரங்களில், குறிப்பாக அரசியலமைப்பு ரீதியிலான சிறப்பதிகாரங்களில் தலையிடக் கூடாது என்று அம்மாநிலத்தின் நான்கு பாரம்பரிய தலைவர்கள் (Undang) எச்சரித்துள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 25) சிரம்பானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அத்தலைவர்கள், 1959ஆம் ஆண்டைய நெகிரி செம்பிலான் மாநில அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 10 மற்றும் 11-ன் படி, மாநில ஆளுநரை (Yang di-Pertuan Besar) நியமிக்கவும் அல்லது பதவியிலிருந்து நீக்கவும் தங்களுக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினர்.

மத்திய அரசாங்க அமைப்புகளைப் பயன்படுத்தி மாநில நிர்வாகத்தில் சீர்குலைவை ஏற்படுத்தவோ அல்லது தடைகளை உருவாக்கவோ வேண்டாம் எனப் பிரதமர் அன்வாருக்கு அவர்கள் கடும் எச்சரிக்கை விடுத்தனர்.
“உங்கள் அதிகார வரம்பை மீறி, தேவையில்லாமல் தலையிட வேண்டாம். மத்திய அரசு அமைப்புகளைப் பயன்படுத்தி எங்கள் மாநிலத்தில் குழப்பத்தை விளைவித்து, மாநில நிர்வாகத்தை முடக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம்,” என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மேலும், எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நெகிரி செம்பிலான் ஆளுநரை நீக்கும் அதிகாரம் இல்லை என்றும், அந்தப் பாரம்பரியச் சிறப்பதிகாரம் தங்களது நான்கு தலைவர்களிடம் மட்டுமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் தெளிவுபடுத்தினர்.

நெகிரி செம்பிலானின் 500 ஆண்டுகாலப் பாரம்பரிய வழக்கங்களின் பாதுகாவலர்களாகத் தாங்களே செயல்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here