புடி மதானி’ டீசல் மானிய மோசடி: வாடிக்கையாளரின் அடையாள அட்டையைத் தவறாகப் பயன்படுத்திய கணக்காளருக்கு 8 மாத சிறை மற்றும் பிரம்படி!

கோலாலம்பூர்:

வாடிக்கையாளரின் அடையாள அட்டை (MyKad) விவரங்களை அனுமதி இன்றிப் பயன்படுத்தி, அரசாங்கத்தின் ‘புடி மதானி’ டீசல் மானியத்தைக் முறைகேடாக உரிமை கோரிய குற்றத்திற்காக பெட்ரோல் நிலைய கேஷியர் ஒருவருக்கு 8 மாத சிறைத் தண்டனையும் 4 பிரம்படிகளும் விதித்து மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

37 வயதுடைய கைருல் ஹைசாத் ஹெர்மான் என்ற அந்த ஆடவர் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளையும் மாஜிஸ்திரேட் நூர் அஷ்ரஃப் சோல்ஹானி முன்னிலையில் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜாலான் சிலாமில் உள்ள ‘பெட்ரோனாஸ் அமான் ஜெயா’ பெட்ரோல் நிலையத்தில், கடந்த ஜூலை 26 மற்றும் 27, 2026 ஆகிய தேதிகளில் நான்கு முறை வாடிக்கையாளருக்குத் தெரியாமல் அவரது MyKad எண்ணைப் பயன்படுத்தி 43.01 லிட்டர் டீசல் (RM99.78 மதிப்பிலான மானியம்) வாங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

தாவாவைச் சேர்ந்த 48 வயதுடைய பாதிக்கப்பட்ட நபர், ஜூலை 30 அன்று புடி மதானி இணையதளத்தில் தனது மானியக் கோட்டாவைச் சரிபார்த்தபோது, தான் செய்யாத பரிவர்த்தனைகள் பதிவாகியிருப்பத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தனது MyKad தொலைந்துபோகாத நிலையில், யாரோ தனது அடையாளத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருப்பதாக அவர் அளித்த புகாரின் பேரில் காவல் துறை விசாரணை மேற்கொண்டது.

விசாரணையில், பெட்ரோல் நிலைய கேஷியரான குற்றவாளி பாதிக்கப்பட்ட நபரின் MyKad எண்ணைத் தவறாகப் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டார். ஜூலை 31 அன்று கைது செய்யப்பட்ட அவர் மீது குற்றவியல் சட்டம் பிரிவு 403-இன் (Dishonest Misappropriation of Property) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தன் தாயாரின் புற்றுநோய் சிகிச்சையைக் காரணம் காட்டி குற்றவாளி குறைந்த தண்டனை கோரியபோதிலும், அனைத்துக் அம்சங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் அவருக்கு 8 மாதச் சிறை தண்டனையும் 4 பிரம்படிகளும் வழங்கி உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here