கொலம்பியாவில் 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் — விஸ்மா புத்ரா அறிவிப்பு

கோலாலம்பூர்:

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் திங்கள்கிழமை பதிவான 7.4 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு, அங்குப் பதிவு செய்துள்ள மலேசியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக வெளியுறவு அமைச்சு (விஸ்மா புத்ரா) உறுதிப்படுத்தியுள்ளது. 

உள்ளூர் நேரப்படி காலை 7.34 மணியளவில் சாக்கோ மாநிலத்தில் உள்ள சான் ஜோஸ் டெல் பால்மர் நகருக்கு அருகே இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்தது. 

இதில் காலீ (Cali), பெரெய்ரா (Pereira), மனீசாலேஸ் (Manizales), அர்மேனியா (Armenia) மற்றும் தலைநகர் போகோட்டா (Bogotá) உள்ளிட்ட மத்திய கொலம்பியப் பகுதிகளில் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டு, கட்டடங்களுக்கும் உள்கட்டமைப்புகளுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. 

கொலம்பியாவிற்கான தூதரகப் பொறுப்புகளைக் கவனித்து வரும் பெரு, லீமா நகரில் (Lima) உள்ள மலேசியத் தூதரகம், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதுடன் சூழ்நிலையைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

கொலம்பிய அரசுக்கும் அந்நாட்டு மக்களுக்கும் மலேசிய அரசு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிர்ச்சேதம் மற்றும் சேத விவரங்கள் முழுமையாக மதிப்பிடப்பட்டு வருகின்றன.

கொலம்பியாவில் உள்ள அல்லது அங்குப் பயணம் மேற்கொண்டுள்ள மலேசியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் விழிப்புடனும் இருக்குமாறும், உள்ளூர் பேரிடர் மேலாண்மை அதிகாரிகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதுவரை தங்களைப் பதிவு செய்யாத மலேசியர்கள் e-Konsular இணையப்பக்கம் வாயிலாக உடனடியாகப் பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here