கட்டுப்பாட்டை இழந்த யமஹா மோட்டார் சைகிள்: 21 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு; 16 வயது சிறுமிக்கு தீவிர சிகிச்சை!

குளுவாங்:

ஜோகூர், குளுவாங் – டெக் வா ஹெங் சாலையின் 2.4-ஆவது கிலோமீட்டரில் இன்று அதிகாலை இடம்பெற்ற சாலை விபத்தில், மோட்டார் சைகிளை ஓட்டிச் சென்ற தனியார் துறை ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் பயணித்த அவரின் நண்பி பலத்த காயமடைந்தார்.

இன்று அதிகாலை 5.30 மணியளவில், சிம்பாங் ரெங்காமில் இருந்து குளுவாங் நகரத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் குளுவாங் மாவட்டப் போலீஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் பஹ்ரின் முகமட் நோ தெரிவித்தார்.

சாய் ஜியா சென் (21) என்பவரால் ஓட்டப்பட்டYamaha Y16ZR ரக மோட்டார் சைகிள், திடீரெனக் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடதுபுறக் கடையில் இருந்த வடிகால் (சாக்கடை) சுவரில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.

சிம்பாங் ரெங்காம், தாமான் செந்தோசாவைச் சேர்ந்த 21 வயது இளைஞருக்குக் கழுத்து, மார்பு மற்றும் உடற்பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டது.

கோலாலம்பூர், ஜின்ஜாங் உத்தாராவைச் சேர்ந்த அவரது 16 வயது நண்பிக்கு இடுப்பு மற்றும் தலைப் பகுதியில் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகக் குளுவாங் எஞ்சே பெசார் ஹாஜாஹ் கல்சோம் மருத்துவமனைக்கு (HEBHK) அனுப்பி வைக்கப்பட்டது. காயமடைந்த சிறுமி அதே மருத்துவமனையின் மஞ்சள் மண்டலத்தில் (Yellow Zone) அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து 1987-ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here