கோலாலம்பூர்:
நாட்டின் ஊழியர் சேம நிதி வாரியம் (EPF) 2026 ஆம் ஆண்டின் முதல் பாதியில் (1H 2026) தனது முதலீட்டு வருமானத்தில் 48 சதவீதம் மாபெரும் உயர்வைப்பதிவு செய்துள்ளது.
உலகளாவிய பங்குச் சந்தைகளின் வலுவான செயல்பாடு, அனைத்துலக முதலீடுகளின் மூலமான லாபம் ஆகியவற்றின் காரணமாக, இந்த காலப்பகுதியில் ஈபிஎஃப் நிறுவனத்தின் மொத்த முதலீட்டு வருமானம் 57.5 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, மலேசியர்களின் ஓய்வூதிய சேமிப்பைப் பாதுகாப்பதில் EPF தொடர்ந்து நிலையான, நீண்ட கால முதலீட்டு உத்திகளைக் கடைப்பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது ஆகும்.
நடப்பு ஆண்டின் இரண்டாவது காலாண்டில் மட்டும் ஈபிஎஃப்வின் முதலீட்டு வருமானம் 44 சதவீதம் அதிகரித்து 29.77 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 20.61 பில்லியன் ரிங்கிட்டாக இருந்தது.
இந்த காலாண்டு வருமானத்தில் சுமார் 70 சதவீத பங்களிப்பை, அதாவது 20.94 பில்லியன் ரிங்கிட்டைப் பங்குச் சந்தை முதலீடுகள் வழங்கியுள்ளன.
புவிசார் அரசியல், சந்தை நிலவரங்கள் சவாலாக இருந்தபோதிலும், ஈபிஎஃப் நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருமானத்தை முன்கூட்டியே ஈட்டியுள்ளதாக இதன் தலைமைச் செயல் அதிகாரியான அகமட் ஸுல்கர்னைன் ஒன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மலேசிய அரசுடைமைப் பத்திரங்கள், கடன்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட நிலையான வருமானம் தரும் கருவிகள் 6.91 பில்லியன் ரிங்கிட்டைச் வருமானத்தை ஈட்டி, மொத்த முதலீட்டு வருமானத்தில் 23 சதவீதப் பங்களிப்பை வழங்கியுள்ளன.
மேலும், சொத்து, உள்கட்டமைப்புத் துறைகள் 1.30 பில்லியன் ரிங்கிட்டையும், Money Market Instruments 0.62 பில்லியன் ரிங்கிட்டையும் ஈட்டியுள்ளன.
ஜூன் 30 ஆம் தேதி நிலவரப்படி EPF இன் ஒட்டுமொத்த முதலீட்டுச் சொத்து மதிப்பு 1.54 டிரில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ள நிலையில், அனைத்துலக முதலீடுகள் வாயிலாக மட்டும் 19.29 பில்லியன் ரிங்கிட் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





















