கோலாலம்பூர்:
2026/2027 கல்வியாண்டுக்கான பாலிடெக்னிக் இளங்கலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
உயர்க்கல்வி அமைச்சின் பாலிடெக்னிக் மற்றும் சமூகக் கல்லூரி கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் [https://ambilan.mypolycc.edu.my] என்ற இணையதள முகவரியின் வாயிலாகத் தங்கள் முடிவுகளைச் சரிபார்க்கலாம்.
தகுதி பெற்ற மாணவர்கள் நேற்று முதல் ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை தங்களது சேர்க்கைக்கான சம்மதத்தை உறுதி செய்ய வேண்டும்.
பொலிடெக்னிக் உங்கு உமார், பொலிடெக்னிக் சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா, பொலிடெக்னிக் இப்ராஹிம் சுல்தான் மற்றும் பொலிடெக்னிக் சுல்தான் அஸ்லான் ஷா ஆகிய நான்கு கல்வி நிலையங்களில், பொறியியல், வடிவமைப்பு, சுற்றுலா, உள்ளிட்ட 12 பாடப்பிரிவுகளில் மொத்தம் 534 இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய மாணவர்களுக்கான பதிவு செப்டம்பர் 21-ஆம் தேதி தொடங்கும் நிலையில், வாய்ப்பு கிடைக்காத மாணவர்கள் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை இணைய வழியில் மேல்முறையீடு செய்யலாம்.
மேலதிகத் தகவல்களுக்கு 03-8888 3837 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சல் வாயிலாகத் துறை அதிகாரிகளை அணுகலாம்.























