கோலாலம்பூர்:
தாய்லாந்தின் சுங்கை கொலோக் பகுதியில், 1,560 ‘எப்பாம்’ (Epam – Nitrazepam) மனநல மாத்திரைகளைக் கையில் வைத்திருந்த குற்றத்திற்காக இரு மலேசிய இளைஞர்களைத் தாய்லாந்து போலிசார் கைது செய்துள்ளனர்.
கிளாந்தான் மாநிலத்தைச் சேர்ந்த 24 மற்றும் 30 வயதுடைய இரு இளைஞர்கள், கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் சுங்கை கொலோக்கில் உள்ள உணவகம் ஒன்றின் முன்பாகக் கைது செய்யப்பட்டனர் என்று, சுங்கை கொலோக் போலீஸ் அதிகாரி கர்னல் துன் சிரிக்குண்ட் தெரிவித்துள்ளார்.
தாய்லாந்து சட்டப்படி இரண்டாம் வகை மனநலப் பொருளாக (Category 2 psychotropic substance) வகைப்படுத்தப்பட்டுள்ள ‘நைட்ராசெபம்’ மாத்திரைகள், 39 அட்டைகளில் (தலா 40 மாத்திரைகள்) அடைக்கப்பட்டிருந்தன. இதன் மொத்த மதிப்பு 10,608 பாட் (சுமார் RM1,310) ஆகும்.
பொதுமக்கள் அளித்த ரகசியத் தகவல் மற்றும் உளவுத்துறைத் தகவலின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அனுமதியின்றி விற்பனை செய்யப் போதை மாத்திரைகளைக் கையில் வைத்திருந்ததற்காக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து நாட்டின் சட்டப்படி, இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 1 ஆண்டு சிறை தண்டனை, 20,000 பாட் வரை அபராதம் (சுமார் RM2,468) அல்லது இரண்டுமே விதிக்கப்பட வாய்ப்புள்ளது.























