கோலாலம்பூர்:
சபா, செம்பூர்ணாவில் நேற்று பிற்பகலில் ஏற்பட்ட பயங்கரத் தீவிபத்தில் உணவகம் ஒன்று முற்றிலும் எரிந்து சாம்பலானதுடன், நபர் ஒருவர் கையில் தீக்காயமடைந்தார்.
இந்த தீவிபத்தில் விடுதிக்குச் சொந்தமான உணவகம் முற்றிலுமாக அழிந்தது என்று, செம்பூர்ணா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜைனல் சின்சியான் கூறினார்.
தீயின் கடுமையான வெப்பம் காரணமாக அருகில் இருந்த விடுதி கட்டிடத்தின் 20 சதவீதப் பகுதிகள் சேதமடைந்தன.
கையெரிச்சலால் பாதிக்கப்பட்ட நபர் விடுதி நிர்வாகத்தால் உடனடியாகச் செம்பூர்ணா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
நேற்று மதியம் 12.47 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்ற தீயணைப்புக் குழுவினர், 12.52 மணியளவில் சம்பவ இடத்திற்குச் சென்றடைந்தனர்.
நீர்வழித் தீயணைப்புப் பிரிவைச் சேர்ந்த 10 வீரர்கள் உட்பட மொத்தம் 29 தீயணைப்புப் படையினர் கடற்பகுதியிலும் தரைவழியிலும் தீவிரமாகச் செயல்பட்டு, சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். பிற்பகல் 4.11 மணியளவில் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன.
தீவிபத்திற்கான காரணம் மற்றும் ஏற்பட்ட நிதியிழப்புகள் குறித்துத் தீயணைப்புத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.























